Saturday, October 31, 2009

மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

கும்பிடக் கும்பிடக் கொழும்பில் அடிவாங்கிக் கரையொதுங்கிக் கிடக்கிறது தமிழரின் மானம்...குத்துவிளக்கேற்றிக் குடம்குடமாய் பால் சொரிந்து மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

Wednesday, October 28, 2009
நான்...
எப்போதும் போலவே
இப்பொழுதும்...

**தகடூரை அண்டிய அதிகமானின்
நெல்லிக் கனிக்காய்
அலைந்து,அலைந்து....
அங்கிருந்து இங்கும்,
இங்கிருந்து அங்குமாய்...

என்மனதிற்கும், எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!!

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

பிணமலைக்குவியலின்,
சரிவுப்புறத்தில் ஒழிந்து
உயிர்தரித்தும்...

குருதி சேற்றுப் படிவினுள்
கால்கள் புதையப்புதைய
ஓடிய பொழுதிலும்...
இரவுபகலாய் எமனாய் விழுகிற
செல்லும்,துப்பாக்கி வேட்டும்,
மாடு குடிமனை மக்களின்
மேலாய் வெடிக்கிற போதிலும்...

ஒரே ஒரு கணத்துள் - என்
துணயாய் வந்தவன்
மண்டை பிளந்துயிர்
மரிக்கிற போதிலும்....

குருட்டுப் பிடிமானத்தோடு - என்
நெஞ்சு முனகும் !

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா


நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா

குறிப்பு:
**தகடூர்: அதிகமான் மன்னன் அரசாண்ட இடம். அதிகமான் நீண்ட காலம் உயிர் வாழும் சக்தி கொடுக்கும் நெல்லிக்கனி பெற்றவன்.

கருத்துக்கள் (3)
ஆயுதமொன்றே..
3 செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2009 12:36
ஈழவன்
உன்னைப் போலவே நானும்..
இன்னும் எரிகிற இனத்தில்
இறந்து கொண்டிருக்கிற வனத்தில்
என்ன செய்யப் போகிறோம்
ஏவுகணையும் எரிகுண்டும் இல்லாத போது..!

உன் கவிதையோடு ஈழம் வெல்லும்.
nettes Gedicht !
2 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:42
sathees
nettes Gedicht Ramona.
erhält es aufrecht.
danke
அற்புதமான கவிதை !!
1 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:16
செங்கோன்
"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாமா? --அல்லது
ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லுமா??

உண்மையில் ஒவ்வொரு இலங்கைத் தமிழனுக்குள்ளும் இன்றுவரை அறிந்து கொள்ள முடியாதிருக்கின்ற அல்லது புரிந்துகொள்ளமுடியாதிருக்கின்ற அர்த்தமுள்ள கேள்வி இது.. அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்.


Friday, October 9, 2009

சமாதானப் பரிசு !
எந்தச்சமாதானம் - இங்கு
நிறுவப்பட்டிருக்கிறது

எத்தகைய மாற்றம் - இங்கு
நிகழ்ந்து விட்டிருக்கிறது.

ஊர் எரிய வேவு பார்த்ததையும்,
ஊர், ஊராகச்சென்று
மாலைவாங்கியதையும் தவிர......
அமெரிக்க டாங்கிகளின்
இரும்புச் செயின்களில்
ஆப்கான் குழந்தைகள் - இன்னும்
நசுங்கிக் கிடக்கையில்........

சமாதானப் பரிசு
அறிவிக்கப்பட்டுவிட்டது.

உலகத்து இராசாவிற்கு
இன்னுமோர் கொம்பு.

வல்லமையுள்ளவனுக்கே
சமாதான விருதென்கிறது
நோபலிற்கான தேர்வுக்குழு !


இனி என்ன??
எதையும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும்
ஒப்புக்கொள்ளவேண்டியதுதான்!!!!

Wednesday, October 7, 2009

பெண்ணிய வியாபாரிகள்.

பெண்ணிய வியாபாரிகள்.
ஒரு உண்மை வாக்குமூலம் .....

பத்திரிகைக்காரியாலயம் நடாத்திய பரிசுக்குலுக்கலில் விழுந்த பட்டுப் புடவையைப் பார்க்க ஆசை,ஆசையாய் இருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. கோவிலுக்குப் போகவேண்டும். இந்தச்சாட்டில் இதனைக்கட்டிவிட வேண்டியதுதான். தீர்மானித்துவிட்டேன்.வாழ்வில் முதல் தடவையாகக் கட்டப்போகிற பட்டுச் சேலை.மனதிற்கு இதமாக இருந்தது. சொண்டுக்கு மைபூசி அழகாய் இருந்த பட்டுச்சேலையின் முந்தானையைச் செருகிக்கொண்டு கண்ணாடிமுன் நின்றேன். என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
சஞ்சிகைகளை சையிக்கிள் கரியரில் கட்டிவைத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பிவிட்டேன். ஐயர் இன்று விசேடமாகபூசை பண்ணினார். பட்டுப் புடவையைப் பார்த்தவுடன் எல்லோரும் மரியாதையோடு நின்றனர். இந்நாட்களில் எடுப்பாகத் தோற்றம் கட்டினால் தான் எல்லாம் மரியாதையாக
நடைபெறுகிறது. வரும் வழியில் 2,3 வழமையான வாடிக்கையாளர்களின் வீடுகளை முடித்துக்கொண்டு திரும்பிய வேளையில் தான் அந்தப்பெரிய மாளிகையின் கதவு அகலத்திறந்திருக்கக் கண்டேன். வாசலில் எவரையும் காணவில்லை. பைசிக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு 2,3 சஞ்சிகைகள் சகிதமாக வாசல் அழைப்பு மணியை அழுத்தினேன். ஆடம்பரமான தேவதை ஒன்று வாசல்கதவைதிறந்து வரவேற்றது.

வாங்கோ..வாங்கோ....வரவேற்புப் பலமாக இருந்தது.
என்னால் என்னை நம்ப முடியவில்லை.
என்னையும் ஒருபொருட்டாக வரவேற்க இவரால் எப்படி முடிந்தது? எல்லாம் இந்தப் பட்டுபுடவையின் நேரமோ....?
உங்கள் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..அந்தத் தேவதை மேலும் குழைந்தாள். எனக்குப் புல்லரித்தது. அம்மா.. நான் வாய் திறந்தேன். என்னைபேச விடாது அவளே தொடர்ந்து பேசினாள்.தான் பிறந்தது இங்கு தானாம், வாழ்ந்தது அமெரிக்காவில், வாழ்க்கைப்பட்டது நோர்வேயில் என்றாள். மகளைப்படிக்க வைக்க இங்கு வந்திருப்பதாகச் சொன்னாள்.தான் சர்வதேச தமிழ்மாதரணித் தலைவர் என்றும் 5 வருடங்களாகத் தானே தலைவியாக இருப்பதாகவும், பெருமை பொங்கச் சொன்னாள். நோர்வே மஞ்சு என்றழைக்கப்படும் தனக்குத் தமிழ்த் தென்றல் என்றொரு பட்டப்பெயரும் கூடவே இருப்பதாகச் சொன்னாள்.
யார் உங்களைத் தலைவியாக்கி இந்தப் பட்டத்தையும் தந்தார்கள்? என்று கேட்க வாயெடுத்தேன். அவள் விடாமால் தொடர்ந்தாள். மாதர் வாழ்வு வளமாகவில்லை, எம்மை ஏமாற்றிக்கொண்டும் எத்திப்பிழைத்துக்கொண்டும் தான் இன்னமும் ஆண் வர்க்கம் இருக்கிறது. நாம் இவற்றிற்கெல்லாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். சற்று நிறுத்தினாள். எனக்கு அடிமுடி பிடிபட வில்லை. அதைவிட எனக்கு நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது. சற்று எழுந்தேன். உட்காரச் சொன்னாள். ஏதாவது குடிக்கப் போகிறீர்களா?
விஸ்கி, கோலா,பியர் ஏதாவாது...இழுத்தாள் நான் வேண்டாமெனத் தலையாட்டினேன். கதவு மணி கிறீச்சிட்டது.
கதவைதிறக்கச் சென்றாள். மூலையிலிருந்த பொம்மரேனியன் இனத்தைசேர்ந்த வெள்ளைநிற அவளின் செல்ல நாய் நீலக்கண்களோடு ஓரு பொம்மையை போல உட்கார்ந்திருந்து என்னை ஏளனமாகப் பார்த்தது.
தொடரும்......

Saturday, October 3, 2009

நான் !!!

நான் !!
நான் உங்களுக்குப் புதியவள் என்பதால் கண்டும் காணாதவர்களாக, வந்தும் வராதவர்கள் போல,படித்தும் படிக்காதவர்கள் போல, பார்த்தும் பார்க்காதவர்கள் போல எப்படி உங்களால் மெல்ல நழுவ முடிகிறது??? தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று எல்லோருக்கும் பின்னூட்டம் இட்டுப் பெரிய மனதோடு கைகொடுத்துத் தூக்கிவிடும் நீங்கள்
எனக்கும் ஒர் கை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு என்
இரண்டாம் நாள் வாக்குமூலத்தோடு வந்திருக்கின்றேன்.
இந்த வாக்கு மூலத்தை வழங்குகின்ற நான் யார் என்பது உங்களுக்குப் போகப்போகப் புரியலாம்.உயிரோடு இதில் வந்து பதிவிட என்று இன்னமும் உயிரைப் பிடித்திருக்கிற என்னை நீங்களும் கண்டு கொள்வீர்களென்பது என் நம்பிக்கை.
பிறந்ததிலிருந்து இது நாள்வரை என் மனதுக்குபிடித்து,என்னை மீட்கவென எந்த அற்புதங்களும் நிகழ்ந்ததில்லை. எந்த ராஜகுமாரர்களும், எந்தராஜகுமாரத்திகளும் எனக்காக ஒருகணம் நின்று நிதானித்ததுமில்லை. என்னைத் தொட்டணைக்கவெனத் துடிக்கின்ற மீட்பர்கள் எவரும் என்மனதைத் தொட்டணக்கவேண்டுமென முயன்றதுமில்லை. வரலாறு,மதம் ,மொழி, இலக்கியங்கள், பெண்ணியக் குழுக்கள் என்று அத்தனையும் கவனிக்காது,மிதித்துப் போட்டிருக்கிற அற்ப சருகு நான் .உலகத்தின் ஒட்டுமொத்த துக்கமும்,துயரமும் என்மீதே ஊற்றப்பட்டிருப்பதாக சதா எண்ணி ஏங்குகிற ஒரு ஜடம்.

Friday, October 2, 2009

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

சட்டைப்பை பொய் பேசாது....
சாத்திரமும் சம்பிரதாயமும்
பார்க்காது...
சாதிவகுத்துப் பிரித்து வைக்காது...
தன்னுள் விழும்
சதங்களையும், இலட்சங்களையும்...
சரிசமமாகச் சுமப்பது !

வெற்றுப்பையுடன் வந்து
இலட்சாதிபதியானோர் யார் ??
இலட்சாதிபதிகளாக வந்து
வெற்றுபையாகினோர் யார்??
சட்டைப்பைகள் மட்டுமே தெரிந்து
வைத்திருக்கிற இரகசியம் !

சட்டைப்பைகள் ஒருவேளை
பேசத் தொடங்கினால்..

சமூகத்தின் முதுகெலும்பெனும்
பல தலைகள் - தானாகவே
முகட்டு வளைகளில்ம
தூக்கு மாட்டிக்கொள்ளும்.

உளறுவாயர்கள் பலர்
ஊர் பேர் தெரியாமல் போய்விடுவர் !!

சல்லிக் காசுமற்று
சமூகத்தின் கண்பொத்திக்
காசுக்காரர்களாய் நடிக்கிற..
பேர்வழிகளை - துண்டுவிரித்துத்
தெருவோரம் உட்கார்த்திவைக்கும் !

ஒவ்வொருவர் போட்டு மிதித்த
பூக்களின் கணக்கும்....
பூஜைக்குப்போன பூமாலைகளின் கணக்கும்...அவரவர்
சட்டைப்பைகள் மட்டுமே
அறிந்து வைத்திருக்கிற விடயம் !!

யார் யாரோ பாவிகளுக்காக - பாவம்
சட்டைப்பைகள் தாங்களே
பாவக்கணக்கைச் சுமக்கின்றன !!
மூக்குப் பொடி டப்பா முதல்....
முகமூடித்திருடரின் துப்பாக்கிவரை...
தங்கிச் செஞ்சோற்றுக்கடன்
தீர்க்கும் கர்ணபரம்பரை -
இந்தச் சட்டைப்பைகள் !!

வட்டமாய், சதுரமாய், வடிவங்கள் மாறினாலும்
திட்டமாய் இதனைத் தேடித் திருடர்கள் வந்த போதும்...
கத்தியால் இதனை வெட்டிக் கையாடல் செய்த போது,ம்...

மனைவியர்,கணவன்மார்கள்,மக்கள் என்று எவருமே
வரமாட்டார் மரணநேரம்......
ஆனாலும்
மனிதனே உனக்காய் வந்து
மயானத்தில் அழியும் சட்டைபை !!!

அவர்கள் !!


அவர்கள் !!

மகாதேவன்கள்!!
எல்லாவேதங்களையும்
எழுதியதாய்ச்சொல்லும்
மகான்கள் !!


முற்றிலும்
உணர்ந்ததாய்
உனக்கு மூளைச் சலவை
செய்தவர்கள் !!


அவர்கள் இரு என்றால் இருக்கவும்...
அவர்கள் இற என்றால் இறக்கவும்....
மட்டுமே உனக்கு இங்கு உரிமை.


நீ எப்படி? எவ்வளவு,
காலம் வாழ்வதென்றும்....
என்னென்ன, எப்பொழுது?
நிகழுமென்றும்.....
உனக்காக - அவர்கள்
கணக்குப் போட்டுள்ளார்கள் !!


அவர்கள் அசைவின்றி
உன்னால் ஒரு கண
அசைவுமில்லை !
அவர்களுக்காகப் பேசவே
உன் நாவு!!
அவர்களுக்காகப் பார்க்கவே,
உன் கண்கள்!!

அவர்கள் குரல் கேட்கவே
உன் செவிகள் !!
அவர்களுக்காகச் சிந்திக்கவே
உன் மூளை !
அவர்களுக்காகச் சுவாசிக்கவே
உன் மூக்கு !


சலசலத்தெழுந்த பேராறுகள் கூட
சப்தமில்லாமல் கலந்த
சமுத்திரங்களில்...
புறவுலகம்,அகவுலகம்
சமூகம்...பிரக்ஞை...
முன் நவீனம்... பின் நவீனம்..
என்று கைமதுனத்தால்
விந்து பிறப்பித்துக்
கடல் பெருக்கெடுக்க வைக்கும்
சூட்சும மேதைகள் !!


இன்று - நீ
அவர்களுக்காக
எடுப்புத்தூக்கு!!

அவர்கள் நாலுவரி எழுதி - அதுவே
காப்பியம் என்பார்கள்...
உடனே தலையாட்டு !!

அவர்கள்
கிறுக்கித்தள்ளியவைதான்
கீர்த்தனை என்பார்கள்..
உரத்த குரலில் ஊளையிடு !


நேற்றைய கண்ணாடித் துண்டில்
அவர்களுக்காக வாழப்பிறந்த
உன் இன்றய முகம்
சப்தமில்லாமற் காணாமற்போவது
கண்டும் கலங்காதிருக்கிறாய் நீ...
மொட்டைமரமாய் இலையுதிர்த்தும் பனிப்புலத்துள் பட்ட மரமாகிப் போய் நிற்கும் .....
எனக்கு மொழியிருந்தும், என்னால் அதைப் பேச முடியவில்லை.
எனக்கு மதம் இருந்தும், என்னால் அதைத் தழுவ முடியவில்லை.
எனக்கு மண்ணிருந்தும், என்னால் அம் மண்ணில் வாழ முடியவில்லை.
எனக்குப் பெயரிருந்தும், என்னால் அப்பெயரைப் பயன்படுத்தமுடியவில்லை.
என் கடவுள்களை நானே சிருஸ்டித்துவிட்டு,அவைகளைக் கைதொழுவதைவிட எனக்கு வேறு ஏதும் புரியவில்லை.