Sunday, November 8, 2009

தேவதைக் குஞ்சே!!!

மிகுந்த சர்ச்சையை ஏற்ப்படுத்திய இக்கவிதையை ஈழநேசன் இணைய வலை பிரசுரித்திருந்தது. இணைய வலை முகவரி www.eelanation.comதேவதைக்குஞ்சே.....
மூக்கும் முழியுமாய்
தமிழ்மொழி பேசும்
அழகுச் சிட்டே !!!

நீ ஏன்
இங்கு வந்து
பிறந்து தொலைத்தாய்...

கன்னங்குழி விழ
தத்தி நடந்து மழலை பேசிடும்- உன்னைச்
சிதறடிக்கப்போகிறது
இந்த மண் !!!

உன் பஞ்சு மேனியைப்
பாளும் குண்டு தின்று தீர்க்கவும்...
செல் துண்டு உந்தன் தலையினைப் பிளக்கவும்...
வல்லுறவில் நீ வதைபட்டுப் போகவும்...
விதி உனக்காய் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றிற்கும், தப்பி நீ உயிரோடிருந்தால்
எஜமான்களின் எடுபிடியாகவும்,
மனித வெடிகுண்டுப் பொட்டலமாகவும்
மாறப்போகிறது உன் மழலை உடல்.

எப்படியோ உனக்கு ஒரு
கொடூரம் இந்த மண்ணில்
எழுதப்பட்டிருகிறது .

எல்லோரையும் போலவே
வீரிட்டழுதபடி விழுந்த - உனக்குத்
தமிழ் என்று பெயரிட்டுத்
தரணி அழித்த பரிசு இதென்று
சந்தோசப்படு !

காடு தீப்பற்றி எரிகையில்
கேட்பாரற்றுக் கருகிப் போகிற - சிறு
புல்லாய் இருக்கிற பிஞ்சுக் குருத்தே!!
இந்த மண்ணில்
இன்னும்
ஏன் வந்து பிறந்து
தொலைத்தாய்???


துராகமெது,சத்தியமெது
என்று சுயம் தேட முற்பட்டுச் செத்த
உன் முன்னோர்கள் போலவே
இறப்பதற்கு முன்னாடியுள்ள
கடைசி நிமிடங்களில்
எதுவும் புரியாமலே
உன்
எஞ்சியுள்ள இரத்தத்தையும் -இப்
பூமிக்கிறைத்து விட்டுப் போ.


அறிவையும்,தன்னம்பிக்கையையும் -உன்
மண்டையிலிருந்து பிடுங்கிவிட்டு அதை
அடிமை எனும் மண்போட்டு
நிரப்பி விடத்துடிகிறது
அதிகாரம்.

இனி
உன் தலையிலும் கொம்பு முளைக்க
வேண்டுமென நினைப்பது வீண் !!!

மயிர் நீத்தால் உயிர்வாழாதாம் கவரிமான்.
உனக்கு மயிர் மட்டுமா போயிற்று???

உனக்குள்ளிருக்கும்
சத்தியத்தின் குரலைக்கேட்பவன் - எவனும்
இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லைத்தாயே !

இன்னமும்
உனக்கென உன்முன் கிடக்கிற
உன்னதங்கள் எது?

சுடலையில் நடக்கவும்,
சுடு மண்ணுள் படுக்கவும்,
குருதியில் குளிக்கவும்,
பட்டினிகிடந்து பயந்து
தவிப்பதற்கும் மட்டுமே
உன்பிஞ்சு உடல் படைக்கப்பட்டதெனில் -நீ
இருந்தென்ன?? செத்தென்ன??

சாவைவிடவும் பிழைத்தலே மேலெனில்
சாவைவிடவும் மோசமான பிழைத்தலை
உனக்கென்று எழுதிவைத்தது எது ?????

உனக்கெதிரான - எல்லா
அனியாயங்களிலும்,
ரகசியங்களிலும் - உன்
விடுதலையும், வாழ்வும்
புதைந்திருப்பதாக
இப்போதும் சொல்லும்
அயோக்கியர் முகத்தில்
உன்னிடம் இன்னும்
எஞ்சிக்கிடக்கிற உமிழ்நீரைக்
காறி உமிழ்ந்துவிட்டு கண்மூடிப் போ !!- ரமோனா


உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி


உன் தேவதைக் குஞ்சுக்கு என்ன
முலைப்பாலா? மூத்திரமா? ஊட்டி வளர்க்கிறாய்
அய்ம்பத்தி எட்டில் பாணந்துறையில்
ஐயரைக் கோவிலில் போட்டு எரித்தவன்
இந்தப் பொழுதில் ஒரு மன நோயாளியை
கடலில் கரைத்தான்..


பொல்லாலும் தடியாலும்
போட்டு அடித்த அந்தப்
பொல்லாத சாதிக்கு என்ன
பூட்டா இருக்கிறது..?


இந்த இரண்டு கொலைகளுக்கும் இடையில்
அய்ம்பது ஆண்டுகள்..


இராசபக்சா இராட்சதர்களை
உரசி வளர்த்துவிட்டு இப்பொழுது
சரத் பொன்சேகாவால்
சரிபார்க்கிறது இந்தியம்..


அம்மா தாயே..
இராட்சதர்களுக்கு இறப்பில்லை...


அதனாலேதான் நாம் இன்னும்
அடிமைகளாய்..விலங்கு ஒடிப்பது என்து விளையாட்டு அல்ல..
ஒருபக்கம் கெட்டவர்கள் இருபக்கமும் எட்டப்பர்கள்..


உனக்குத் தெரியுமா?
வியட்னாம் யுத்தம்..


அம்மணமாய் அந்தச் சிறுமி..
வீதி நீட்டுக்கு ஓடும் காட்சியைக்
காணும்வரை
அமெரிக்கர்கள் அழவில்லை..


சிறுமியைப் பார்ததபின்தான்
செல்லரித்தது சமூகம்..


ஒன்றேமுக்கால் இலட்சம் இராணுவம்
வியட்னாமில் இருந்து
இழுக்கப்பட்டார்கள்...


அந்தச் சிறுமி யார்தெரியுமா?
வெள்ளை தேசங்களில்
மனிதநேய மகத்துவமாய்..இப்பொழுது
புனிதம் காட்டும் ஒரு புண்யவதி..!


அய்நா மன்றமும் அணிநாடுகளும்
ஆதரித்து எடுத்து
அறிவார்ந்தவளாய் ஆக்கியிருக்கிறது..


பகலில் மறைந்து இரவில் வெடித்த
எரித்திய மண்ணுக்கு
ஆயிரம் செங்கடல் நீளத்திற்கு
எலும்பும் தோலுமாய் நின்று ஒரு
இளைத்த ஒருசாதிதான் இன்று
சுதந்திரம் பேசுகிறது..


பிலிப்பைன்ஸ் எப்படிப்
பூத்தது சுதந்திரம்..


சிறையில் இருந்து வெடித்து வந்தான்
சுதந்திர வீரன்..அக்கினோஸ்


பூட்டிய சிறையும் பொடிப்பொடி ஆனதே..!


ஏழையாய் இரு..கோழையாய் இராதே!
வாளில்லை என்றால் வீரமா போகும்..
எரியும் நிலத்தில் ஈரம் போகுமா?
அரக்கம்தான் ஆட்சி..வரும்பார் மீட்சி..


ஓ..சாகப் போகிறாய் என்றா
வேகிறாய் நீ..?


இட்லர் எரித்த
அய்ம்பது அய்ம்பது இலட்சம்
தொலைந்த பின்னும்
யூதம் அழிந்ததா?


பீனிக்ஸ் பறவைகள் சாகாது அம்மா!
சாம்பலில் இருந்தும் உயிர்த்து வரும்..

இன்று அல்லது நாளை அல்லது
நாளை மறுநாள்..


எங்கோ இருந்தும் எங்கள்மண்
சுதந்திரம் பேசும்..


அந்நியன் கையில் அடிமையாய் இருப்பவனைவிட
தன்னின மண்ணுக்காய்ச்
சிந்திய உடலுக்குச் சிறப்புண்டு தாயே!


முப்பதினாயிரம் மாவீரர்கள் அல்லவா..?
நீமட்டும்..சாவதற்கு உன்மகளைச் சபிக்கின்றவளாய்..


நாளை உன்னதும் மரணம்..உன்
குஞ்சினதும் மரணம்.. கூட அந்த
நிலத்தின் மடியில் ஒரு மாலையில் எரியலாம்..


ஆனால் விடியலின் மண்ணில்
உன் சாம்பல் ஆயிரம் பூக்களாய்..


இல்லையேல்..
உன் குஞ்சுத் தேவதை
வஞ்சியாய் வனிதையாய்..
பெண்ணினம் போற்றும்
பூக்களாய் விரிவாள்...மண்ணில் வாழ்வதும்
மண்ணில் மடிவதும்
மண்ணுக்காய் வாழ்வதும்
மண்ணுக்காய் மடிவதும்..
குருதியில் எழுதிக் கொண்ட இளைஞர்கள்
சுருதியாய்த் தமிழர் தேசங்கள் எங்குமாய்..


விடியலுக்கான ஒருமண்..அந்த
வேதத்தில் விளைந்தால்
இறப்புகள் என்பது சரித்திரமாகும்..
இனத்தின் விடுதலை வரலாறெழுதும்..மண்ணில் இறப்பினும்
மரணமே சிறக்கும்..!
-தீவேரா

சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து வெளிப்படுகிற முனகல் ஐயா. அந்தக்கவிதை!
1 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 13:00
ரமோனா
நன்றி ஐயா,உங்கள் பதில் கடிதத்திற்கு.
வனப்பான வீடுகளில்,வளமான வசதிகளோடு,சொகுசுக்கார்களிலே அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ
இருந்து கொண்டு என்கவிதையைப் படித்து அதற்குப் பதிலும் எழுதிய
உங்களுக்கும்,உங்கள் தமிழ்பற்றிற்கும் தலைவணங்குகின்றேன்.
அந்தக்கவிதை கம்பிகளுக்குமத்தியில் சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து
வெளிப்படுகிற முனகல் ஐயா. நீங்கள் கவியில் சொன்னதைபோல பசியாலும் பட்டினியாலும்
முலைப்பாலும் கூட வராத சோகம்.மூத்திரத்தைகூட பருக்கலாமா ?அல்லது பருகலாமா?என்று அங்கலாய்க்கிற கையறுநிலைப் பொழுதுதான் ஐயா அது..
58ல் ஐயர் எரிக்கப்பட்டதைச் சொல்லவருகிற தாங்கள் அண்மைக்காலத்தில் நடந்து முடிந்து போன இன அவலத்தைப்பற்றி ஏன்ஐயா மௌனம்? நீங்கள் சொல்கிற ஐ.நா சபையும், அதனால் பயிற்றுவிக்கப்பட்ட வியட்னாமியப் பெண்ணும் இப்பாதகம் நடக்கும் போது பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏன் அகில உலகமும் தான். நம்பிக்கைகள் சிதைந்த போது எழுந்த கவிதை அது. யாரையும் புண்படுத்தவென எழுதவில்லை. நான் ஈழவிடுதலைக்கு எதிரானவளல்ல. தாய்மையின் கடமையும் அதனைப் போல் முக்கியம் என்றெண்ணுபவள் நான்.
அடிமையான வாழ்வைவிட சாவது மேல் என்பது தான் தேவதைக்குஞ்சூடாக நான் சொல்ல விளைந்தது. இப்போதைக்கு உங்கள் குஞ்சுகள் எல்லாம் மாற்று நாட்டுக் குடியுரிமையில்
மகிழ்வாக இருப்பதானால் என்னைப்போல் நீங்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.மண்ணில் இறப்பினும் மரணம் சிறக்கும் என நீங்கள் புலம் பெயர் மண்ணில் இருந்து வழங்கியிருக்கும் கவிச் சான்றிதழை நான் மகிழ்வோடு ஏற்றுகொள்கின்றேன்
ரமோனா


பதிலுக்குப்பதில்.
2 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 22:28
தீவேரா
இன்னுமொரு பதில்..

ரமோனா!


ஐயர் கொலை ஒரு ஆரம்பம்.
பம்பலப்பிட்டிக் கடற்பறி இன்றானது
இடைவெளியைச் சொன்னபோது
படைக்கொடுமையும் நீ பார்த்துத் தானே..
ஆகவேண்டும்..


சொல்லித்தான் தெரியணுமா என்ன?
இங்கே..உலகத்தில்..
பதினாறு பேர் தீயில் எரிந்தார்கள்.. இல்லையில்லை
தம்மைத் தாமே எரித்தார்கள்..
வெளிநாடு சொர்க்கமில்லைத் தாயே..!


புளியோதரையும் பொரித்த(மீனும்) செத்தலும் கிடைக்கிறதுதான்..

இறந்தவர்கள் இலட்சமல்லவா?
இதை நீ எழுதித்தான் தெரியணுமா?


சும்மாவல்ல உலகப்பந்தில் ஒவ்வொரு தமிழனும்
கருகி வெந்தான்..
புலிகளைத் தெரியாதவர்கள் இவர்கள்..
இலட்சத்து இளைஞர்கள்
ஓடும் வேகக் கார்களைப் பாதையில் மறித்தார்கள்..


எல்லாம் எம்மண்ணின் தாயருக்காக..?
நாங்கள் சடங்கள்..
நம்மண் பறிபோகிறது..
எட்டப்பன் குட்டியோடு தின்னுகிறான்

எங்கள் கை இனத்துக்காய் நீளுகிறது..
எழியவன் விடுகிறான் இல்லை..
அதுமட்டுமா..?
அரசநக்கர்களால் அவலப்படுகிறோம்..

உன்முகாமுக்குள் வர..
உங்கள் பா.ஊக்களுக்குப் பார்வையில்லை
அய்நாவுக்கு அனுமதியில்லை..
எட்டப்பன் மட்டும் இங்கிலாந்தில் இருந்து
அழைக்கப்படுகிறான்..போதாக்குறைக்கு கழியர்நிதி.


தேனும்பாலும் ஓடுகிற திருமதுரை என்றல்லவா
இந்தியத் தீய எட்டப்பன் திருக்கதை விடுகிறான்..


போய்வந்தால் பறுவாயில்லை..
திண்டதிற்குத் தக்கதாய் ஏப்பம் விடுகிறான்..


தூளியிற் தாலாட்டோடு நீயும் இல்லை
நாங்களும் இல்லை..


பெற்றவர் இல்லாத பிள்ளைகள் கொஞ்சமா..?
உற்றவர்க்கு நோகாமல் இனம் இருக்கிறதா?


இனத்தின் கெட்டவர் யார்?
பாராளுமன்றத்தில் தமிழ் இனத்திற்காகப்
பரிதவித்தவர்களைப் பார்த்துப் பார்த்துச்
சுட்டானே ஒருவன்..
ஏன்?

இவன் பல்லக்குச் சரிந்துவிடும் என்பதாற்தானே..?
இவன் பார்த்துப் பார்த்து அப்பாவிகளைத்
தெருவில் சுட்டவன் அல்லவா?

இந்துக் கோவிலை புத்தபிக்கு ஏறி அடித்தான்..
எத்தனை பாதிரிகள் சிலுவையில் செத்தார்கள்..
இவர்கள் உயிர்த்தெழ முடியாதபடி இன்னமும்
சாத்தான்கள்..

இப்பொழுது எங்களுக்கு வலிமை இல்லை..
வாழ்நாள் முழுவதும் சாக்கள் தான்?

இங்கே இருக்கிற ஒவ்வொரு
ஈழத்தமிழனுக்கும் ஒன்றல்ல பத்துவரையான
உடன்பிறப்புக்கள் கொலை செய்யப்பட்டார்கள்..

உனக்கும் வேதனைதான்..
எனக்கும் வேதனைதான்..

அதற்குப் பரிசாய் எம்நாடு
எழும்.. எழுதப்படும்..

அதுவரை நீயழுதும் பயனில்லை..
நானழுதும் பயனில்லை..

இராட்சதர்கள்
பேத்தைகளாய்..
எட்டப்பர் அட்டதிக்கும்..

உன் தொட்டிலுக்குத் தாலாட்டு
தேசங்கள் உனக்குத் தரும்..
அதுவரை நாங்களும் உறங்கோம் தாயே..!Srilanka der ganze Politiker sind sehr schlecht.
4 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 14:15
Sathees
dieses Gedicht ist sehr gut. Srilanka der ganze Politiker sind sehr schlecht. Ich weiß, dass ein Ding srilankan Tamilisch nicht gute Zeit ist.
sathees

/////////////////////////////////////////////////////
This poem is very good. All the srilanka politicians are very bad. I know this is not good time for Sri lanka tamils.
Sathees
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலி!
3 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 13:55
செங்கோன்
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலிகளைத்தான் இக்கவிதையில் காண்கின்றேன்.எலிப்பொறிகளைவைத்து யானைப்பிடிப்போமென்ற வாதங்களை மாற்றீடு செய்து
புதியபரிமாணங்களில் சிந்திக்க,செயலாற்ற வேண்டிய பல தேவை அனைவருக்கும் உண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் என வீண்ஐம்பம் பேசவல்ல நேரம் அல்ல இது.
செங்கோன்
கொலைகாரன் யார்? தெரியாமல் ஒரு கவிதை..!
2 திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009 14:23
மனிதன்
அறுபது வருடங்களாக இனக்கொலை செய்யும் ஆட்சியை
யார் வெல்வது? எப்போது..?
நீ எழுதும் இந்த எழுத்துகளின் சமநேரத்தில்..
மனவழுத்தம் கொண்டவனை கட்டையால் அடித்துக்
கடலிற் கரைத்தார்களே..? ஏன்
அங்கே என்ன களத்தில் புலிகளா? நின்றார்கள்..
அடிமை விலங்கொடிக்காதவரை..
மிடிமை போகாது தாயே..!..
உனக்கு மீட்சியில்லை என்றால்
உன் பிள்ளைக்கும் இல்லை பெண்ணே..
உன் பிள்ளை அரசாளும் காலம்வரும்.. அழாதே!
யதார்த்தம் பேசுகிற கவிதை!
1 திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009 13:48
பாலன்
யதார்த்தம் பேசுகிற கவிதை.அழகான வரிகள்.மனதைத் தொடுகிற படம்.
வளர்க உங்கள் இணையம்.
வாழ்த்துக்களோடு.....
பிற்ஸ்பேர்க்கிலிருந்து...... பாலன்


Srilanka der ganze Politiker sind sehr schlecht. தேவதைக் குஞ்சே
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலி! தேவதைக் குஞ்சே
சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து வெளிப்படுகிற முனகல் ஐயா. அந்தக்கவிதை! ரமோனாவுக்கு ஒருபதில்!
கொலைகாரன் யார்? தெரியாமல் ஒரு கவிதை..! தேவதைக் குஞ்சே
யதார்த்தம் பேசுகிற கவிதை! தேவதைக் குஞ்சே