நான் உங்களுக்குப் புதியவள் என்பதால் கண்டும் காணாதவர்களாக, வந்தும் வராதவர்கள் போல,படித்தும் படிக்காதவர்கள் போல, பார்த்தும் பார்க்காதவர்கள் போல எப்படி உங்களால் மெல்ல நழுவ முடிகிறது??? தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று எல்லோருக்கும் பின்னூட்டம் இட்டுப் பெரிய மனதோடு கைகொடுத்துத் தூக்கிவிடும் நீங்கள்
எனக்கும் ஒர் கை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு என்
இரண்டாம் நாள் வாக்குமூலத்தோடு வந்திருக்கின்றேன்.
இந்த வாக்கு மூலத்தை வழங்குகின்ற நான் யார் என்பது உங்களுக்குப் போகப்போகப் புரியலாம்.உயிரோடு இதில் வந்து பதிவிட என்று இன்னமும் உயிரைப் பிடித்திருக்கிற என்னை நீங்களும் கண்டு கொள்வீர்களென்பது என் நம்பிக்கை.
பிறந்ததிலிருந்து இது நாள்வரை என் மனதுக்குபிடித்து,என்னை மீட்கவென எந்த அற்புதங்களும் நிகழ்ந்ததில்லை. எந்த ராஜகுமாரர்களும், எந்தராஜகுமாரத்திகளும் எனக்காக ஒருகணம் நின்று நிதானித்ததுமில்லை. என்னைத் தொட்டணைக்கவெனத் துடிக்கின்ற மீட்பர்கள் எவரும் என்மனதைத் தொட்டணக்கவேண்டுமென முயன்றதுமில்லை. வரலாறு,மதம் ,மொழி, இலக்கியங்கள், பெண்ணியக் குழுக்கள் என்று அத்தனையும் கவனிக்காது,மிதித்துப் போட்டிருக்கிற அற்ப சருகு நான் .உலகத்தின் ஒட்டுமொத்த துக்கமும்,துயரமும் என்மீதே ஊற்றப்பட்டிருப்பதாக சதா எண்ணி ஏங்குகிற ஒரு ஜடம்.