Monday, March 15, 2010

ஒரு மாதிரியான கதை!
ஒரு தேவதையும்
அவள் தேர்ந்தெடுத்த எழுத்தாளனும்...

ரமோனா

கல்லைக் கடவுள் சிறுதடியாற் தட்டினான். கல் சிதறுண்டு போனது. சிதறுண்ட கற்கள் சிறு சிறு தீவுகளாகின. அந்தத்தீவுகளில் மண்ணைப்படைத்து,அம்மண்ணில் மனிதரைக் கடவுள் ஊதினார். மனிதர்கள் உதயமாகினர். உதயமாகிய மனிதரின் தலையில் கடவுள் தடியால் தட்டியபோது பள்ளத்தில் விழுந்தவன் பள்ளனென்றும், பயத்தில் நளுவி ஏறியவன் நளவனென்றும் வயற்புறத்தில் விழுந்தவன் வேளாளன், என்றும் சத்தமிட்டுத் தொலைத்தவன் பறையனென்றும் சாதிபிரித்தார். பனைகளும் தென்னைகளும் முளைத்தன. நாய்களும், பூனைகளும்,பிற விலங்குகளும் மனிதரை வலம் வந்தன.காகங்கள் தலைக்கு மேலாய்ப் பறந்தன. இப்படித்தான் அந்தத்தீவு உருவானதாம்.
தீவின் அந்தோனியார் கோவிலில் அவனது 12வது பிறந்த தினத்திற்கு நேத்திவைத்து பூசைசெய்து குருத்துவம் படிப்பிக்கப்போவதாக ஒப்புக்கொடுத்து பூசைக்கு வந்தோருக்கெல்லாம் பாண்கொடுத்த அம்மா சொன்ன கதையது.
ஆனாலும் அடுத்த பிறந்த தினத்திற்கு அவன் வீடு அவனுக்காய் இருக்கவில்லை. பிள்ளை பிடிப்பவர்கள் அவனை இயக்கமொன்றிற்கென இரவிரவாக இழுத்துச் சென்று விட்டார்கள்.அங்கு அவனுக்கும் அவனையொத்த பலருக்கும் யானையேற்றங்களும் குதிரையேற்றங்களும் பயிற்றுவிக்கப்படவில்லை.குறுந்தடிகளைவைத்து வேலிபுகும் பயிற்சிகளும்,சென்ரியில் வேவுபார்த்தல், பங்கர் வெட்டுதல்,பாதைத்துப்பரவு எனப்பல சுளுவான வேலைகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டது. அவ்ர்களுக்கு வேளாவேளைக்குச் சாப்பாடும் இருந்தது. குறுந்தடிகளை வைத்துப் பபயிற்சிகள் பயிற்றுவித்த ஒரு நாளில் அவன்வேலிபுகுந்து தப்பி ஓடினான். வாய்ப்பந்தல் போடுவதில் வல்லவானான அவன், தன் உறவினர்களின் உதவியோடு பிரான்சிற்குள் தப்பி வந்த போது பாலகப் போராளி என்று அவனைப் பாசமுடன் பிரான்சு அரசு அகதியாக்கி அங்கீகரித்தது. அந்தப்பாலகப்போராளி பிரான்சின் அகதிமெத்தையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனோடு கூடவே அவனது பைபிளையும் தலையணையடியில் புதைத்து வைத்திருந்தான்.நித்திரையில் அவனது நினைவுகள் சிதறிப்பறந்து கொண்டிருந்தன.
ஜேர்மானிய நகரான ரியரின் முதன்மைச்சாலையினூடாக நடந்து, மூன்றாவது சந்தில் மொட்டாக்கோடு ஒரு உருவம் பழமையும் புதுமையுமான அந்த விரிந்த பங்களாவிற்குள் புகுந்தது. நெடுநாள் பழகிய வீட்டிற்குள் போவதைப்போல நுளைந்த அந்த உருவம் உள்ளிருந்த கண்ணாடி அலுமாரியின் முன் நின்றது. உள்ளே நீண்ட நாட்களுக்கு முன் எழுதி மை காய்ந்த கடிதங்கள் அடுக்குகளாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்கலங்க அவதானித்தது. "உன் அன்புக்காதலி ஜெனி" என்ற கையெழுத்தைப்பார்த்த போது குலுங்கிக்குலுங்கி அழுதது. தான் தூக்கிவளர்த்த பிள்ளையின் கடிதமது என்று மனதிற்குள் முணுமுணுத்த வண்ணம் திரும்பியது. வீட்டுவாசலில் ஜெனியும் மார்க்ஸஸும்,எங்கெல்ஸ்ஸும் சிரித்தவண்ணமுள்ள படத்தை வாஞ்சையோடு பார்த்து விட்டு வெளியேறியது.
இதிலிருந்து வடமேற்காக சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் மிகச்சிறிய குக்கிராமம் வோடன் இருந்தது. அங்குதான் மார்க்க்சின் நண்பன் எங்கெல்ஸ் வளர்ந்து வாலிபனானவன்.திராட்சைக் கொடிகள் படர்ந்து குலைகள் மதர்த்துச் செழித்து வளர்த்திருந்த அந்த ஊர்கள் இன்று கட்டிடக்காடுகளால் நிறைந்திருந்தன. எங்கெல்ஸ் ஊரோடு ஒத்தோட முடியாமல் பின் பிரான்சில் வாழ்ந்தவர். அவர் இருந்த அறையைப்பார்க்க அந்த உருவம் விரும்பியிருக்கவேண்டும். வானவெளியில் எம்பிக்கிளம்பியது. அப்போது அதன் முகம் சுடராய் ஒளிர்ந்தது.
3வது சாமத்திற்கான தேவாலாயத் திருமணி அடித்தோய்ந்த வேளை படுத்திருந்த பாலகப் போராளி தன்னுடைய தீவின் அந்தோனியாரின் திருமணியோ என நினைத்து அருண்டு படுத்த வேளை அந்த உருவம் அந்தப் பாலகப்போராளியின் அகதி மெத்தைக் கருகில் நின்றது. மெல்லக் கண்திறந்த அவன் கன்னி மரியாள் தன் கண்முன் நிற்பதைக்கண்டு அதிசயித்தான். மனதைத்திடப்படுத்திக் கொண்டு எழுந்து முழங்காற்படியிட்டு ஜெபித்தான். அவன் உடுத்திருந்த சறம் முதன் முதலாக (wet dream ) எனப்படும் வெள்ளை வெளியேற்றத்தால் நனைந்திருந்தது. அவன் அதைப்பார்த்த போது வெட்கம் பொங்கித் திடுக்கிட்டான்.
மகனே வெட்கப்படாதே. இதுஆடவர் எல்லோர்க்கும் சகஷம். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. நீ இப்போ பாலகன் அல்ல இளைஞன் என்று அந்தக் கன்னிமரியாள் பேசிய போது அவனுக்கு மகிழ்வாய் இருந்தது. எங்கெல்ஸ்ஸுன் அறையை தலைகீழாக்கி வைத்திருக்கிறார்கள் என்றது கன்னி மரியாள். இது அகதிகளுக்கான அறை என்றான் பாலகப் போராளியாயிருந்து இப்போ இளைஞனானவன்.
நேற்று அது வேறொருவருடையதாயிருந்தது. இன்று அது உன்னுடையதாயிருக்கிறது, நாளை அது மற்றொருவருடையதாகும்,இதுவே அகதி அறைகளின் தத்துவம் என்றது அந்த கன்னிமரியாள் உருவம்.
அன்னையே நீங்கள் தான் கன்னிமரியாளோ?? சந்தேகத்தோடு கேட்டான் அவன்.
இல்லை நானும் கன்னிமரியாள் போன்றவள்தான் என்று புதிர் போட்டது அந்த உருவம்.
அப்படியென்றால் தாயே நீங்கள் யார்??
என் பெயர் ஹெலனா டெமூத்(Helena Demuth), கார்ல்மார்க்ஸின் மனைவி ஜென்னியை வளர்த்தவள் நான். எங்கெல்ஸ் என் நண்பன், கன்னிமேரிக்கும் கணவன் இல்லாமலேயே குழந்தை பிறந்தது. எனக்கும் அப்படியே ஆனது. அதன் பேரிலேயே நானும் கன்னிமரியாள் போன்றவள்தான் என்றேன் என்றது அந்த உருவம்.
பாலகப் போராளிக்கு எதுவும் பிடிபடவில்லை பைபிளில் தலைமுறை தலைமுறையாகக் கன்னிமரியாளின் வம்சம் எழுதப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறதே என்றான் அவன்.
பரிசுத்த ஆவிதான் தலைமுறைகளின் தலைவன் என்றது உருவம்.
நான் தனிநாயகமுதலியின் வம்சம் என்றான் பாலகப்போராளி விட்டுக்கொடுக்காமல்.
எவனுக்கும் எந்த வம்சமும் கிடையாது எல்லோரும் பரிசுத்த ஆவியின் பிள்ளைகளே என்றது அந்த உருவம்
பாலகப் போராளிக்கு கோபம் பொத்துக் கொண்டுவந்தது.
வம்சமென்று எதுவுமில்லை எல்லோரும் ஒன்றே என்றால் அதற்காகப் போராடிய நாமெல்லாம் என்ன கேணையர்களா?? இனம் பிரிச்சவனெல்லம் இழித்தவாயர்களா??
மொழிக்காக உயிரிழந்தோரெல்லாம் மடையர்களா??கேட்கவேண்டும் போலிருந்த கேள்விகளை மனதோடு அடக்கிக் கொண்டான்.
மௌனத்தோடு தலகுனிந்திருந்த பாலகப் போராளியை பார்க்க அவளுக்கு பாவமாய் இருந்தது.
அவன் மேல் இரக்கப்பட்டு " மகனே உனக்கு எது வேண்டுமானாலும் கேள்" என்றாள் ஹெலன்.
நான் ஊரார் மெச்ச எழுத்தாளானாக வேண்டும் என்றான் அவன்.
கையைச் சுழற்றி மனிதக் குரங்குவடிவிலான ஒரு எழுதுகோலை அவன் மீது விட்டெறிந்து, புல் உலர்ந்து பூ உதிரும்; உன்னுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகின்றேன் இந்தக் கணத்திலிருந்து நீ ஊரார் மெச்சும் எழுத்தாளானாவாய் என்று வரமருளியது.
அவளின் வாக்கு உடனே பலித்ததுபோல எழுதுகோலைக்கையிலேடுத்தவுடன் மானிடக்குரங்குபோலவே அவன் உடம்பு தினவெடுத்தது.
மகிழ்ச்சிபொங்க நான் உனக்கே என் எழுத்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன் தாயே என்று நாக்குளறத் தொழுதான்.இந்த அன்னிய மண்ணிலே நான் அகதியாவே மடிந்து விடுவேனா?? தாயே என் எதிகாலம் பற்றிச் சொல்லும் என்று சற்றும் மனம் தளராமல் கேட்ட போராளியை நோக்கி அந்தப்புனிதப்பாவை ஒரு புன்னகை சிந்தினாள். நீ புலன்பெயர்ந்தோருக்குத் தேவனாயிருப்பதற்காகவே, உன்னை உன் தீவிலிருந்து புறப்படப்பண்ணினார் கடவுள் என்றும் நானே கதைகளின் கர்த்தர் என்றும் துணிந்து சொல் என்றாள் அவள்.
உன் இனத்தின் எதிர்காலம் சவக்குழியில் போனாலும் உன் எதிர்காலம் பிரகாசமுறும். விடாக்கண்டனும், கொடாக்கண்டனுமாய் இருக்கிற உன்னைச் சிலர் குருவாக்குவார்கள். அச்சீடர்களின் குடும்பங்களைச் சிதைத்து நீ சுகந்தரிப்பாய். அந்தமான் செல்லூலர் சிறையை படம் பிடித்த தடித்த தோல்ச் சீமாட்டி உன்னை ஆசீர்வதிப்பாள். அவள் தயவில் நீ திரையில் வருவாய். புலிவாலை நீ பிடிப்பாய். அதனால் புகழடைவாய் எலியாய்க்கிடந்த நீ எல்லா மண்ணிலும் சண்டியனாவாய் என்று உத்தரம் கூறி, அந்ததேவதை மறைந்து போயிற்று.
அவன் கடைவாய் நீரைத்துடைத்தபடி புரண்டு படுத்தான்.கனவு விடுவதாயில்லை.
எழுதிக்கொண்டிருந்தான் அவன் எழுத்தால் பூவுலகம் விம்மியது. மூலை முடுக்கெங்கும் அவன் எழுத்து நிறைந்து வழிந்தது. புதிய புதிய சங்கீதங்களையும், பைபிளின் 3வது ஏற்பாட்டையும் எழுதிய அவன் 41வது தீர்க்கதரிசியாகப் பிரகடனப்படுத்தப்பட்டான். "ம்" என்ற மூச்சொலியில் அவன் உலக இருப்பை எழுதத் தொடங்கிய வேளை மேற்குத்திசையில் பூகம்பங்கள் வெடிக்கத்தொடங்கின. கீழ்த்திசையில் பேரலை எழுந்து ஊர்களை விழுங்கியது. மட்டக்களப்பிலிருந்தும், மண்டைதீவிலிருந்தும் அதல பாதாளத்தில் புதைந்திருந்த நீல நிறப்பாம்புகள் வெளிப்பட்டுச் சாரைசாரையாக உலகெங்கும் ஊரத்தொடங்கின.இராமேஸ்வரத்தில் இணக்கமிலாதவனுக்கு அடித்த்த போது உலகச் சண்டியனாவாய் என்கிற அன்னை ஹெலன்னவின் வாக்குத் தத்தம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பிரதியுபகாரமாக "ஹெலானாவின் குழந்தைக்கு யார் அப்பன்" என்று அவன் பூமியை உலுப்பத் தொடங்கினான். பூமி உருள உருள அவனுடைய கேள்விகளும், எழுத்துக்களும் பூமிப்பந்தை உப்பிப் பெருக்கச்செய்தன. அவனது பெண்ணியமும், இன்னபிற பேசாப் பொருள்களிலும் மேலும் பெருத்து உப்பிய உலகம் பலூனாய் வெடித்துச் சிதறி நிர்மூலமானது.
காதடியிற்கேட்ட வெடியோசை கேட்டு, அகதிமெத்தையில் கனவுகண்டு கொண்டிருந்த பாலகப் போராளி பயந்து போய்க் கண்விழித்தான்.
அவனது சறம் உண்மையில் வெள்ளை பட்டிருந்தது. வெட்கத்தோடு அங்குமிங்கும் பார்த்தான்.அவன் கனவிற்கண்ட தேவதைகள் எவையும் அவன் கண்முன் இருக்கவில்லை.
------------------