Sunday, December 20, 2009

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......



பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......


சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்

பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென்
யூதாஸ் கரியோத்து...

எழுந்திரு !!!

காட்டிக்கொடுக்கும்
காரியம் முடிந்துமேன்
காலில் கிடக்கிறாய்?? எழுக நீ

எழுந்துன் முப்பது வெள்ளி
முடிச்சினைப் பெறுக!!

நீ காட்டிக் கொடுத்த
கடவுளாம் அவனக் கல்லால் அடித்தோ
கத்தியால் சிதைத்தோ, வாளால் அறுத்தோ
கொல்வதாய் இல்லையாம்...
நல்ல இனத்துத் தேக்கின் சிலுவையில்
அறைந்து கொல்வதாய் அரசனின் செய்தி

அதுவுமுனக்கு நன்மையாய்ப் போனது
எழுந்திரு யூதாஸ்

சுரணையே இல்லா மனிதர்கள் எங்கும்
எதற்கும் தலையினை ஆட்டுவர் என்பதால்
சிலுவையில் அவனை அறைந்து கொன்றபின்
இரத்தம் சிந்த இரும்பாணிகளுடன்
இறைவன் இருத்தல் தகாதெனச் சொல்லி
இறைவனை இறக்கித் தெருவினில் போட்டுச்
சில்லறைக்காக சிலுவையை விற்குக!!

தேக்கு மரத்துச் சிலுவை என்பதால்
நல்ல விலை பெறும் .

இன்றைய நாளில்
விண்ணக வேந்தனை வெற்றுடலாக்கினர்
வீதியில் போட்டுச் சிலுவையை விற்றனர்.
காணுகின்ற கண்களைத் தோண்டினர்.
தேவன் தெரு வீதியில் கிடந்தான்.
மனிதர்கள் அவனை மிதித்து
ஆளுக்கொரு திசையில்
விரைந்து மறைந்தனர்.

- ரமோனா