ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற
பெரிய வெள்ளிச் சிறப்புக் கவிதை அல்லது வதை:
பயணமுகவர்கள்
தினம்….தினம்…
வருகிறது பெரியவெள்ளி !!!!!
சிலுவையின்றிச்
சாகடிக்கப் படுகிறார்கள்
புதுப் புது யேசுக்கள் !!!!
ஓளிபாய்ச்சி
உயிர்த்தெழுந்திருகின்றன
உலகப் பெருந்தெருக்கள்.
புரியாத மொழி……
புரியாத ஊர்……….
புரியாத மனிதர்கள்……
ஈஸ்டர் தினத்திற்கு
முன்னிரவொன்றில்--நான்
அவனுடன் அந்த
அறையினுள் நுழைந்தேன்.
‘பொலிஸ் வந்தால்
புருஸன் என்று
ஏன்னையே சொல்"
மீசை மயிர்கள்
முகத்தில் உரச
நெருங்கி அமர்ந்தான்
அவன் முடிவெடுத்து விட்டான்
மூடிய கதவுக்குள்-எது
நடந்தாலும் வெளியே வராதென….
இனிச் சட்டையைக் கிழிக்கலாம்….
வாரினால் அடிக்கலாம்………
எச்சிலால் துப்பலாம்……….
பரிகாசப்படுத்தலாம்………..
இயேசுவைப் போலவே
பாடுகள் படுத்திக்
கொன்றும் போடலாம் .
இது பயணமுகவர்கள் காலம்
அதிஸ்டம் தேடி
அதிஸ்டமாய் வந்து
அதிஸ்டம் தொலைக்கிற
சீதைகள்!!!!!!!
முகவர்கள் வெட்டும்
இடுகாட்டுக் குழிகளில்…….