Friday, October 2, 2009

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

சட்டைப்பை பொய் பேசாது....
சாத்திரமும் சம்பிரதாயமும்
பார்க்காது...
சாதிவகுத்துப் பிரித்து வைக்காது...
தன்னுள் விழும்
சதங்களையும், இலட்சங்களையும்...
சரிசமமாகச் சுமப்பது !

வெற்றுப்பையுடன் வந்து
இலட்சாதிபதியானோர் யார் ??
இலட்சாதிபதிகளாக வந்து
வெற்றுபையாகினோர் யார்??
சட்டைப்பைகள் மட்டுமே தெரிந்து
வைத்திருக்கிற இரகசியம் !

சட்டைப்பைகள் ஒருவேளை
பேசத் தொடங்கினால்..

சமூகத்தின் முதுகெலும்பெனும்
பல தலைகள் - தானாகவே
முகட்டு வளைகளில்ம
தூக்கு மாட்டிக்கொள்ளும்.

உளறுவாயர்கள் பலர்
ஊர் பேர் தெரியாமல் போய்விடுவர் !!

சல்லிக் காசுமற்று
சமூகத்தின் கண்பொத்திக்
காசுக்காரர்களாய் நடிக்கிற..
பேர்வழிகளை - துண்டுவிரித்துத்
தெருவோரம் உட்கார்த்திவைக்கும் !

ஒவ்வொருவர் போட்டு மிதித்த
பூக்களின் கணக்கும்....
பூஜைக்குப்போன பூமாலைகளின் கணக்கும்...அவரவர்
சட்டைப்பைகள் மட்டுமே
அறிந்து வைத்திருக்கிற விடயம் !!

யார் யாரோ பாவிகளுக்காக - பாவம்
சட்டைப்பைகள் தாங்களே
பாவக்கணக்கைச் சுமக்கின்றன !!
மூக்குப் பொடி டப்பா முதல்....
முகமூடித்திருடரின் துப்பாக்கிவரை...
தங்கிச் செஞ்சோற்றுக்கடன்
தீர்க்கும் கர்ணபரம்பரை -
இந்தச் சட்டைப்பைகள் !!

வட்டமாய், சதுரமாய், வடிவங்கள் மாறினாலும்
திட்டமாய் இதனைத் தேடித் திருடர்கள் வந்த போதும்...
கத்தியால் இதனை வெட்டிக் கையாடல் செய்த போது,ம்...

மனைவியர்,கணவன்மார்கள்,மக்கள் என்று எவருமே
வரமாட்டார் மரணநேரம்......
ஆனாலும்
மனிதனே உனக்காய் வந்து
மயானத்தில் அழியும் சட்டைபை !!!

அவர்கள் !!


அவர்கள் !!

மகாதேவன்கள்!!
எல்லாவேதங்களையும்
எழுதியதாய்ச்சொல்லும்
மகான்கள் !!


முற்றிலும்
உணர்ந்ததாய்
உனக்கு மூளைச் சலவை
செய்தவர்கள் !!


அவர்கள் இரு என்றால் இருக்கவும்...
அவர்கள் இற என்றால் இறக்கவும்....
மட்டுமே உனக்கு இங்கு உரிமை.


நீ எப்படி? எவ்வளவு,
காலம் வாழ்வதென்றும்....
என்னென்ன, எப்பொழுது?
நிகழுமென்றும்.....
உனக்காக - அவர்கள்
கணக்குப் போட்டுள்ளார்கள் !!


அவர்கள் அசைவின்றி
உன்னால் ஒரு கண
அசைவுமில்லை !
அவர்களுக்காகப் பேசவே
உன் நாவு!!
அவர்களுக்காகப் பார்க்கவே,
உன் கண்கள்!!

அவர்கள் குரல் கேட்கவே
உன் செவிகள் !!
அவர்களுக்காகச் சிந்திக்கவே
உன் மூளை !
அவர்களுக்காகச் சுவாசிக்கவே
உன் மூக்கு !


சலசலத்தெழுந்த பேராறுகள் கூட
சப்தமில்லாமல் கலந்த
சமுத்திரங்களில்...
புறவுலகம்,அகவுலகம்
சமூகம்...பிரக்ஞை...
முன் நவீனம்... பின் நவீனம்..
என்று கைமதுனத்தால்
விந்து பிறப்பித்துக்
கடல் பெருக்கெடுக்க வைக்கும்
சூட்சும மேதைகள் !!


இன்று - நீ
அவர்களுக்காக
எடுப்புத்தூக்கு!!

அவர்கள் நாலுவரி எழுதி - அதுவே
காப்பியம் என்பார்கள்...
உடனே தலையாட்டு !!

அவர்கள்
கிறுக்கித்தள்ளியவைதான்
கீர்த்தனை என்பார்கள்..
உரத்த குரலில் ஊளையிடு !


நேற்றைய கண்ணாடித் துண்டில்
அவர்களுக்காக வாழப்பிறந்த
உன் இன்றய முகம்
சப்தமில்லாமற் காணாமற்போவது
கண்டும் கலங்காதிருக்கிறாய் நீ...
மொட்டைமரமாய் இலையுதிர்த்தும் பனிப்புலத்துள் பட்ட மரமாகிப் போய் நிற்கும் .....
எனக்கு மொழியிருந்தும், என்னால் அதைப் பேச முடியவில்லை.
எனக்கு மதம் இருந்தும், என்னால் அதைத் தழுவ முடியவில்லை.
எனக்கு மண்ணிருந்தும், என்னால் அம் மண்ணில் வாழ முடியவில்லை.
எனக்குப் பெயரிருந்தும், என்னால் அப்பெயரைப் பயன்படுத்தமுடியவில்லை.
என் கடவுள்களை நானே சிருஸ்டித்துவிட்டு,அவைகளைக் கைதொழுவதைவிட எனக்கு வேறு ஏதும் புரியவில்லை.