Sunday, April 25, 2010

நாடுகடந்த தமிழீழ அரசும், நமச்சல் எடுக்கும் கனவான்களும்.....

புதிய புதிய செப்படிவித்தைகள்:நாடுகடந்த தமிழீழ அரசும்,
நமச்சல் எடுக்கும் கனவான்களும்.....

என்னைப்பிடி உன்னைபிடி என்று உலகளாவிய ரீதியில் 135 உறுப்பினர்களைத்தெரிவதற்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று வாக்குப்போடுபவர்களுக்கு காதில் பூச்சுற்றிவிட்டு கடைகள், வீதியோரங்கள், குந்துமிடங்கள், மரப்பாலங்கள் என்று எனக்கே வாக்குப்போடுங்கள், என்னையே ஆதரியுங்கள் என்று கர்ச்சித்துத் திரிகின்றார்கள் வேட்பாளப் பிரபலங்கள்.காலத்திற்குக்காலம், நேரத்திற்கு நேரம் நிறம் மாறுவோராகத் தாங்கள் பிழைப்பதற்கான புதிய புதிய செப்படி வித்தைகளை நம்மவர்கள் உருவாக்கி வருகின்றார்கள்.


கடந்த 60 வருட காலமாக இந்த உலகத்துடனும், உள்ளூர் மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் வல்லரசுகளுடனும் தமிழரின் தன்னாட்சி,மற்றும் வாழிட உரிமைகள்தொடர்பான அரசியல் சாசனங்களை உள்ளடக்கிய மிகப்ப் பெரியசட்டக்கோவைகள் வல்லமைமிக்க சட்டவல்லுனர்கள்,மற்றும் துறைசார்வல்லுனர்களால் வாதங்களாக வைக்கப்பட்டது.அதன் தொடர்பில் அவர்கள் குத்திப்பேசினார்கள். மிக அரிய வசனங்களினால் ஆர்ப்பரித்தார்கள்.மிகப்பெரிய தமிழர்பலத்துடன் பிரதான எதிர்க்கட்சியாக இலங்கை அரசாங்கத்தின் பாரளுமன்றத்திலே அவர்கள் இருந்தார்கள் .அவர்களின் பேச்சுக்களால் வைக்கப்பட்ட அடிப்படை உரிமை வாதங்கள் தாயக தேசியக் கோட்பாடுகள் மற்றும் இறையாண்மைக் கோசங்களை வெளியுலகமும் உள்ளுலகமும் கண்டுகொள்ளாத, கண்டுகொள்ளவிரும்பாத நிலையில் அம்முதிர்தமிழ்அரசியல் வாதிகள் கடவுளால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்று கூறிய வேளையில் இளம் போராளிகள் விடுதலை வேட்கையில் முடுக்கிவிடப்படுகின்றனர். அவ்விளைஞர்கள் தன்னாட்சி உரிமை வேட்கைமூலம் தமிழர்களை ஒன்றிணைப்போம் என்று சொல்லிச் சொல்லியே பல பல கிளைகளாகப் பிரிந்தார்கள். இப்போது சொல்வதுபோலவே தமிழனிடம் ஒற்றுமையில்லை என்கின்ற கோசத்தை முன்வைத்து வலிமைப்பட்ட குழுக்கள் எளிமையான குழுக்களை அழிக்கத்தொடங்கின. இப்படித் துப்பாக்கிகள் பலதரப்பிலும் பேச முற்பட்ட வேளையில்த்தான் பயத்துடன், தங்கள் உயிர்காக்கப் புறப்பட்டவர்கள் பணமிருந்த புலம்பெயர்ந்தவர்கள். பணமில்லா மனிதர்கள் குழுக்களில் சேர்ந்தார்கள். மாறிமாறி அழித்த இந்த மர்மப் போராட்டத்தில் வலிமையாளர்கள் எஞ்சியிருந்தார்கள். இறுதியில் அவர்களை விஞ்சிய வலிமையாளர்கள் அவர்களைத் தாக்கிய போது அவர்களைக்காக்க எவரும் இருக்கவில்லை.

இப்படியாக எல்லோரும் ஏறி இளைத்த குதிரையில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் ஏறத்துடிகின்றார்கள். இதற்காகப் பெரும் பணச்செலவில் தேர்தல் வேலைகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் எதைப்பேசுவார்கள்? எங்கே பேசுவார்கள்? எப்படிபேசுவார்கள்?? என்பதை அறிந்துகொள்ளாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத புலம் பெயர் தமிழர்கள் வழமைபோலவே நமக்கென்ன இப்போதெல்லாம் வாக்குச் சாவடிக்குப் பொவது ஓர் பொழுது போக்கு என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

தமிழனையும் தமிழர் கலாச்சாரத்தையும் விட்டுகொடுக்காத இறையாண்மையைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்கிற இக்கனவான்கள் வேட்டிசால்வைகளில்லாமல் கோட்டுச் சூட்டுடன் தங்களின் புகைபடங்களுக்குப் புள்ளடிகள் போடக் கேட்டிருக்கின்றார்கள். இதில் ஈழவேந்தன் வேட்டி சால்வையுடன் விதிவிலக்கு.

இதையும் ஒருக்கால் சும்மா செய்து பார்க்கலாமே என்கின்ற தமிழர்களின் முனகலில் பெரும் பணம் இதற்கு வீணாகிறது என்பதை யாரும் எண்ணத் தயாராகவில்லை. காம்புகளில் முடங்கியிருக்கும் எம்மவரின்தாகம் தணிக்க அப்பணம் பயன்பட்டாலும் தேவலை. ஆதங்கத்துடன் வாக்களிக்கப்போகும் தமிழர்களுக்கு இவர்கள் சொல்லப்போவது இதைத்தான்.

வீழ்ந்தாலும் எம்மீசையில் மண் ஒட்டவில்லை.