Saturday, December 5, 2009

ஆக்கிரமிப்பாளனே !!!













ஆக்கிரமிப்பாளனே !!!
ஆயுதமும் - உன்
அதிகாரமும்,என்னை
அம்மணமாக்கலாம்.

அந்தரித்துபோன ஆட்டுகுட்டியைப்
பந்தாடுவதைப்போல
தலயிருந்து கால்வரை - நீ
கடித்துக்குதறலாம்......

ஏகாதிபத்தியமும், எடுபிடிகளும்
கற்பித்தவாறு
மூளை,நரம்பு,நாளம் என்று
மூளச்சலவை
ஊசிகள் போடலாம்.......
மார்பு வயிறு, பெண்குறி
யாவையும்
துவேசமும், குரோதமும் கொண்ட - உன்கரங்கள்
குத்திக்கிழித்துக்
கொடூரம் புரியலாம்......

மொத்தத்தில் எல்லாவிதமான- என்
இருத்தலினையும் - நீ
இல்லாதொழிக்க
கங்கணம் கட்டலாம்!!


என் மூச்சுத் தங்கிடும்
ஒவ்வொரு நிமிடமும் - இந்த
உத்தரிப்பு ஸ்தலத்துள் - ஓர்
மண்புழுப்போன்று - எனை
நசுக்கவும்.... மிதிக்கவும்.....
உனக்கு அதிகாரமுள்ளதாய்
அதட்டி நீ பேசலாம்.

கற்களும் ,முட்களும் கால்களை இடற
நெஞ்சைப் பிளந்து.......
இறுகச் செருகிய இரும்பாணிகளுடன்
சிலுவை தோளிலே, முள்முடி தலையிலே

இதற்கும் மேலாய்
முதுகைப் பிய்க்கும்
கம்பிகட்குப்பின்
கசையடித்தண்டனை!

ஒப்பிட்டுப்பார்த்தால்
எத்தனை யேசுக்கள்!!


ஆக்கிரமிப்பாளனே!!!
இன்னும் என்ன?
செய்திகளுக்கும் கூக்குரல்களுக்கும்
திரைபோட்டு - என்
எல்லா அவஸ்தைகளையும்
உலகத்தின் கண்களில்
மறைத்துப் போடலாம்!!

மிஞ்சிபோன என்னுயிரையும் - நீ
கொன்று புதைக்கலாம்....
கண்களைக்கீறி
விலையாய் விற்களாம்....
பாகம்பாகமாய்
என்னுடம்பின் உதிரியை
உலகச் சந்தையில் சந்தைப் படுத்தலாம்.....

ஐ,நா சபையும்,மற்றும் - உலக
மத்தியஸ்த எஜமானர்களும் - உன்
வாய்ச்சவடாலில் மயங்கிப்போய்
எலும்புக்காடும் வால்களாய் - எந்தன்
இறைச்சியைத்தின்று ஏப்பம் விடலாம் .

எல்லாம் முடிந்ததாய் - நீ
எண்ணியிருக்கையில் தான்
என் மண்ணின் புல்லின் நுனிகூடப்
போரெடுத்து வாள்தூக்கும்!!!

கல்லிற்றுக் கீழே கனல் கக்கும் எரிமலைகள்!!!

துள்ளிவரும் மான் கூடத்
துவக்கெடுத்துன் கதை முடிக்கும்!!!

கல்லறைகள் வெடிக்கும்.!!!

கதைமுடித்தோமென்றிருந்த
மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!!

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.

மரணம் அவர்க்கில்லை!!!!
மனுக்குலத்து மீட்பிற்காய்
மரித்தெழுந்த யேசுவைப்போல்
ஈழத்தெருவெங்கும்......
இவர்கள் எழுவார்கள்!!!!!!!!


---ரமோனா---


உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

கருத்துக்கள்
(5) Aakkramippaalane 5.
சனிக்கிழமை, 05 டிசம்பர் 2009 12:04
(thamilini vairamuthu)
குருதி குடித்தவன் புற்று நோயில் புரளட்டும்..

பிணந்தின்னிப் பசாசுகள் 4.
ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2009 05:54
(செங்கோன்)
தமிழ் மக்களினதும், போராளிகளினதும் பிணங்களையும், மூன்று இலட்சத்திற்க்குமதிகமான மக்களின் அவலங்களையும்,போட்டுமிதித்து அதைத் தங்கள் ஏணியாக்கிக் கொண்டு அதில் சுயலாபம் தேடி உலகம் முழுமைக்கும் பவனிவந்து கொண்டிருக்கிற புலம்பெயர் சீமான்களும், சீமாட்டிகளும் நிறைந்து கிடக்கிற வேளையிது .ஆளுக்கொரு மாவீரர் நாளுரைகூட வெளியாகிக் கொண்டிருக்கிற வேதனையான சூழல். சூரிச்சில் கூடிய தமிழ்க் கூட்டமைப்பு ,தமிழர் நலன்காப்பதாகச் சொல்லி தமது நலன்காக்கப் பாராளுமன்றத்திற்கும் அது போடுகிற பிச்சைப் பதவிகளுக்குமாக பயணிக்க நிற்கிறது. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் இனத்தையுமே அழித்துவிடத் தயாராகி வருகிறது. .இதற்குள் நல்லவற்றை எப்படிக்கண்டடைவது என்பது கேள்விக்குறியாகிறது. நான் இப்போது நின்று கொண்டிருக்கிற எம்பசி கிறாண்டில் (Embassy Grand) கூடிய மக்கள் முகத்தில் எந்த விமோசனமும் தெரியவில்லை.விமோசனம் எங்கிருக்கிறது என்று அறியவும்,அதற்காக நின்று நிதானித்துச் சிந்திக்கவும் கூட அவர்களால் முடியவில்லை.அரத்த மாவை அரைப்பதும்,துவைத்த துணியைத்துவைப்பதும் தான் தமிழர்கள் வேலையா ?என்ற கேள்வியைக்கூடக்கூட்டமைப்பு பேச்சாளியிடம் கேட்க முடியவில்லை. நம்பிக்கை தரும் வாசகங்கள் எதுவும் அவரால் வைக்கப்படவுமில்லை.ஆனாலும்

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.
மரணம் அவர்க்கில்லை!!!!

என்ற உங்களது நம்பிக்கையைப் போலவே எம் எல்லோர் ஆதங்கமும். தேய்ந்த தமிழினம் திருந்துமா?????????

அபூபக்கர்களும்,அமாவாசையும் 3.
சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 18:07
(சேனாதி)
இப்படித்தான் ஆளுக்காள் பல்லவி பாடி தமிழினத்தைக் குட்டிச் சுவாராக்கி வைத்திருக்கிறீர்கள்.
கும்புடிப்பூண்டிக் காம்பில கொடியேத்தின புண்னியவான் களைப் போலத்தான் புலத்துப் புண்ணியவான்களும் பிழைக்க வழிதேடி பலபுனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கினம். இப்ப கவிதையும்,கப்பியங்களும்,உங்க பேச்சுமில்லை முக்கியம். காம்பில சீரழிகின்ற மக்களுக்கு ஒரு தீர்வுகாணுங்கோ, அல்லது தீர்வுகணாவிழைகின்ற நாடுகளையாவது விடுங்கோ?
செத்தவை பிறகெழும்பி வந்தென்ன செய்யப்போகினம். அதுதான் மொத்தமாய் எல்லாம் சுடலையாய் போச்சே???அபூபக்கருக்கும்,அமாவாசைக்கும் என்ன சம்பந்தமோ அதுபோல்த் தான் எல்லாம் தெரிந்ததாய் கவி வடிக்கிற நீங்களும்.

மாவீரர்கள் மறுபடியும் பிறப்பார்கள் 2.
சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 17:37
(நேசன்)
சீமானை வெளியேற்றி விட்டார்களே என்று மனம் கனத்த வேளையில் தான் ஈழ நேசனைப் பார்க்க நேர்ந்தது.தமிழர்களாகிய எமக்கு என்ன நடக்கிறது. எவ்வளவு அவமானங்கள். ஏன் இப்படி?? ரமோனாவின் கவிதை சொல்வதைப் போல் மரித்தெழுந்த யேசுவைப்போல மனுக்குல மீட்பர்களான எம் மாவீரர்கள் மறுபடியும் பிறப்பார்கள். உறுதி எடுப்போம். வீர வணக்கங்கள்.
நேசன்

கதைமுடித்தோமென்றிருந்த மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!! சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 17:18
(தேவா பாலசுந்தரம்)

கல்லிற்றுக் கீழே கனல் கக்கும் எரிமலைகள்!!!
துள்ளிவரும் மான் கூடத்
துவக்கெடுத்துன் கதை முடிக்கும்!!!

கல்லறைகள் வெடிக்கும்.!!!

கதைமுடித்தோமென்றிருந்த
மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!!

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.
மரணம் அவர்க்கில்லை!!!!
அற்புதமான வரிகள்.மாவீரர் நாள் கவிதை ஈழத்தவர்களின் மனக்குமுறலைவெளிப்படுத்தியுள்ளது. ரமோனாவிற்கும், ஈழநேசனுக்கும் வாழ்த்து.

No comments:

Post a Comment