Saturday, June 26, 2010

உலகத்தலைவர்களின் ஜி8 மற்றும் ஜீ20

Friday, June 25, 2010
உலகத்தலைவர்களின் ஜி8 மற்றும் ஜீ20 .









எது மாற்றம்?


உலகத்தலைவர்கள் ஜி8 மற்றும் ஜீ20 மாநாடுகளையொட்டி ரொரன்றோ மாநகரை முற்றுகையிட்டுள்ள இத்தருணத்தில் கனடாவின் மூத்தகுடிகளின் வாரிசுகள் உரத்த குரலில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துகின்றார்கள். மூன்றாவது உலக நாடுகளின் மக்களைவிட கேவலமான வாழ்வு எங்களுடையது. அதனை எந்த கனடிய அரசுகளும் கண்டுகொள்ளவல்லையென அவர்கள் கண்ணீர்மல்க தங்கள் கொடுமைகளை விபரிப்பதை எவரும் நின்று நிதானித்துக் கேட்கவில்லை. அவர்களின் மூதாதையரைகொன்று குவித்த எலும்புக்கூடுகளின் மேல்தான் உல்லாச மற்றும் சல்லாபங்களையும், ஜி8 மற்றும் ஜீ20 மாநாடுகளையும் இன்றைய கனேடிய அரசுகள் செய்கின்றன என்பதையும் எவரும் நிதானத்தோடு சிந்திப்பவர்களாயில்லை. தங்கள் இன்னல் கட்டுக் கடங்காநிலையில் பெரும்தெருவை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களைப் போலவே இவர்களின் குரல்களும் ஓங்கி ஒலித்துப் பின் மறைந்தும்,மறந்தும் போகும். இதுவே உலக நியதியாயிருக்கிறது. அதுசரி மூலை முடுக்குகளிலும்,பட்டிதொட்டிகளெங்கும் நாள்தவறாமல் ஒலித்த எங்களின் தமிழ்க்குரல் உலகத்தலைவர்கள் ரொரன்றோ வந்துள்ள இந்த தருணத்தில் மட்டும் படுத்து விட்டதேன்?? உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்று நாங்கள் எதற்கும் சொல்லிகொண்டிருக்க முடியாது. அஞ்சுவதற்கு அஞ்சாமலிருப்பது பேதமையாகும். இந்தத் தருணத்திலாவது தமிழர்களை வழிநடாத்துகிற தமிழர்கள் இதனை உணர்ந்திருப்பது மனதிற்கு இதமளிக்கிறது.














கனடிய அதிபர் அமெரிக்க அதிபர் கரங்களுள்????






ஓடி..ஓடி..ஓடி..ஓடி


உட்கலந்த ஜோதியை


நாடி..நாடி..நாடி..நாடி..


நாட்களும் கழிந்து போய்


வாடி..வாடி..வாடி..வாடி..


மாண்டு போன மாந்தர்காள்


கோடி..கோடி..கோடி..கோடி


எண்ணிறந்த கோடியே


என்று ஊருக்கு உரக்கக்கூறிய சிவவாக்கியரையோ


அல்லது அதன் பிறகு அற்புதமான அழகு தமிழில் பாடிய பாரதியின்


மோகத்தைக் கொன்றுவிடு பாடலாலோ கூட இந்த மண்ணில் எம்மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை.


மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று அந்நாளிலிருந்து இந்நாள் ஒபாமா வரை கூக்குரலிட்டும் எது மாற்றம் என்று கூட எவருக்கும் புரியவில்லை .









மீண்டும் ஒரு தரம் பாரதியின் அந்த அற்புதமான பாடல் இதோ!!!



மோகத்தைக் கொன்றுவிடு !!

மாகவி பாரதி



மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்


மூச்சை நிறுத்திவிடு


தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில்


சிந்தனை மாய்த்துவிடு


யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்


ஊனைச் சிதைத்துவிடு


ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளன


யாவையும் செய்பவளே!


பந்தத்தை நீக்கிவிடு -- அல்லா லுயிர்ப்


பாரத்தைப் போக்கிவிடு


சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச்


செத்த உடலாக்கு


இந்தப் பதர்களையே -- நெல்லாமென


எண்ணி இருப்பேனோ


எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று


இயங்கி யிருப்பவளே.





கள்ளம் உருகாதோ -- அம்மா


பக்திக் கண்ணீர் பெருகாதோ?


உள்ளம் குளிராதோ -- பொய்யாணவ


ஊனம் ஒழியாதோ?


வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறு


வேட்கை தவிராதோ?

விள்ளற் கா¤யவளே -- அனைத்திலும்

மேவி யிருப்பவளே!

Sunday, April 25, 2010

நாடுகடந்த தமிழீழ அரசும், நமச்சல் எடுக்கும் கனவான்களும்.....

புதிய புதிய செப்படிவித்தைகள்:



நாடுகடந்த தமிழீழ அரசும்,
நமச்சல் எடுக்கும் கனவான்களும்.....

என்னைப்பிடி உன்னைபிடி என்று உலகளாவிய ரீதியில் 135 உறுப்பினர்களைத்தெரிவதற்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று வாக்குப்போடுபவர்களுக்கு காதில் பூச்சுற்றிவிட்டு கடைகள், வீதியோரங்கள், குந்துமிடங்கள், மரப்பாலங்கள் என்று எனக்கே வாக்குப்போடுங்கள், என்னையே ஆதரியுங்கள் என்று கர்ச்சித்துத் திரிகின்றார்கள் வேட்பாளப் பிரபலங்கள்.காலத்திற்குக்காலம், நேரத்திற்கு நேரம் நிறம் மாறுவோராகத் தாங்கள் பிழைப்பதற்கான புதிய புதிய செப்படி வித்தைகளை நம்மவர்கள் உருவாக்கி வருகின்றார்கள்.


கடந்த 60 வருட காலமாக இந்த உலகத்துடனும், உள்ளூர் மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் வல்லரசுகளுடனும் தமிழரின் தன்னாட்சி,மற்றும் வாழிட உரிமைகள்தொடர்பான அரசியல் சாசனங்களை உள்ளடக்கிய மிகப்ப் பெரியசட்டக்கோவைகள் வல்லமைமிக்க சட்டவல்லுனர்கள்,மற்றும் துறைசார்வல்லுனர்களால் வாதங்களாக வைக்கப்பட்டது.அதன் தொடர்பில் அவர்கள் குத்திப்பேசினார்கள். மிக அரிய வசனங்களினால் ஆர்ப்பரித்தார்கள்.மிகப்பெரிய தமிழர்பலத்துடன் பிரதான எதிர்க்கட்சியாக இலங்கை அரசாங்கத்தின் பாரளுமன்றத்திலே அவர்கள் இருந்தார்கள் .அவர்களின் பேச்சுக்களால் வைக்கப்பட்ட அடிப்படை உரிமை வாதங்கள் தாயக தேசியக் கோட்பாடுகள் மற்றும் இறையாண்மைக் கோசங்களை வெளியுலகமும் உள்ளுலகமும் கண்டுகொள்ளாத, கண்டுகொள்ளவிரும்பாத நிலையில் அம்முதிர்தமிழ்அரசியல் வாதிகள் கடவுளால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்று கூறிய வேளையில் இளம் போராளிகள் விடுதலை வேட்கையில் முடுக்கிவிடப்படுகின்றனர். அவ்விளைஞர்கள் தன்னாட்சி உரிமை வேட்கைமூலம் தமிழர்களை ஒன்றிணைப்போம் என்று சொல்லிச் சொல்லியே பல பல கிளைகளாகப் பிரிந்தார்கள். இப்போது சொல்வதுபோலவே தமிழனிடம் ஒற்றுமையில்லை என்கின்ற கோசத்தை முன்வைத்து வலிமைப்பட்ட குழுக்கள் எளிமையான குழுக்களை அழிக்கத்தொடங்கின. இப்படித் துப்பாக்கிகள் பலதரப்பிலும் பேச முற்பட்ட வேளையில்த்தான் பயத்துடன், தங்கள் உயிர்காக்கப் புறப்பட்டவர்கள் பணமிருந்த புலம்பெயர்ந்தவர்கள். பணமில்லா மனிதர்கள் குழுக்களில் சேர்ந்தார்கள். மாறிமாறி அழித்த இந்த மர்மப் போராட்டத்தில் வலிமையாளர்கள் எஞ்சியிருந்தார்கள். இறுதியில் அவர்களை விஞ்சிய வலிமையாளர்கள் அவர்களைத் தாக்கிய போது அவர்களைக்காக்க எவரும் இருக்கவில்லை.

இப்படியாக எல்லோரும் ஏறி இளைத்த குதிரையில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் ஏறத்துடிகின்றார்கள். இதற்காகப் பெரும் பணச்செலவில் தேர்தல் வேலைகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் எதைப்பேசுவார்கள்? எங்கே பேசுவார்கள்? எப்படிபேசுவார்கள்?? என்பதை அறிந்துகொள்ளாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத புலம் பெயர் தமிழர்கள் வழமைபோலவே நமக்கென்ன இப்போதெல்லாம் வாக்குச் சாவடிக்குப் பொவது ஓர் பொழுது போக்கு என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

தமிழனையும் தமிழர் கலாச்சாரத்தையும் விட்டுகொடுக்காத இறையாண்மையைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்கிற இக்கனவான்கள் வேட்டிசால்வைகளில்லாமல் கோட்டுச் சூட்டுடன் தங்களின் புகைபடங்களுக்குப் புள்ளடிகள் போடக் கேட்டிருக்கின்றார்கள். இதில் ஈழவேந்தன் வேட்டி சால்வையுடன் விதிவிலக்கு.

இதையும் ஒருக்கால் சும்மா செய்து பார்க்கலாமே என்கின்ற தமிழர்களின் முனகலில் பெரும் பணம் இதற்கு வீணாகிறது என்பதை யாரும் எண்ணத் தயாராகவில்லை. காம்புகளில் முடங்கியிருக்கும் எம்மவரின்தாகம் தணிக்க அப்பணம் பயன்பட்டாலும் தேவலை. ஆதங்கத்துடன் வாக்களிக்கப்போகும் தமிழர்களுக்கு இவர்கள் சொல்லப்போவது இதைத்தான்.

வீழ்ந்தாலும் எம்மீசையில் மண் ஒட்டவில்லை.




Friday, April 2, 2010

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற கவிதை அல்லது வதை

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற



பெரிய வெள்ளிச் சிறப்புக் கவிதை அல்லது வதை:



பயணமுகவர்கள்



கொடுமையணிந்து

தினம்….தினம்…

வருகிறது பெரியவெள்ளி !!!!!





சிலுவையின்றிச்


சாகடிக்கப் படுகிறார்கள்


புதுப் புது யேசுக்கள் !!!!






ஓளிபாய்ச்சி


உயிர்த்தெழுந்திருகின்றன


உலகப் பெருந்தெருக்கள்.






புரியாத மொழி……


புரியாத ஊர்……….


புரியாத மனிதர்கள்……


ஈஸ்டர் தினத்திற்கு


முன்னிரவொன்றில்--நான்


அவனுடன் அந்த


அறையினுள் நுழைந்தேன்.






‘பொலிஸ் வந்தால்


புருஸன் என்று


ஏன்னையே சொல்"






மீசை மயிர்கள்


முகத்தில் உரச


நெருங்கி அமர்ந்தான்


அவன் முடிவெடுத்து விட்டான்






மூடிய கதவுக்குள்-எது


நடந்தாலும் வெளியே வராதென….






இனிச் சட்டையைக் கிழிக்கலாம்….


வாரினால் அடிக்கலாம்………


எச்சிலால் துப்பலாம்……….


பரிகாசப்படுத்தலாம்………..





இயேசுவைப் போலவே

பாடுகள் படுத்திக்

கொன்றும் போடலாம் .




இது பயணமுகவர்கள் காலம்





அதிஸ்டம் தேடி


அதிஸ்டமாய் வந்து


அதிஸ்டம் தொலைக்கிற


சீதைகள்!!!!!!!


முகவர்கள் வெட்டும்


இடுகாட்டுக் குழிகளில்…….

Tuesday, March 30, 2010

இந்தியப் பேய்களிடம் சிக்கிச் சிதறிச் சின்ன பின்னாமான ஈழத்துப் பெண்.

இந்தியப் பேய்களிடம் சிக்கிச் சிதறிச் சின்ன பின்னாமான ஈழத்துப் பெண்.




ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தமிழகம் வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்...............
பாரத மாதாவின் மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?



வாழமுடியாது தவித்து வந்த ஏதிலியான ஈழப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?


"தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

நகர்காவலர் என்ற போர்வையிலிருக்கும் நயவஞ்சகர்களின் கொடுமை:






பொலிஸ்நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.






பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.






தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டுக் கொன்று விடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்துள்ளார்"




ஏதிலித் தமிழ்ப் பெண்ணின் உயிரையே குடிக்கும் பேய்களாகினர் காவல்த்துறை அதிகாரிகள்?

கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்புத்தேடி தமிழகம் வந்தால், தமிழகத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர்களே கொடியவர்களாக இருப்பது கொடுமையோ கொடுமை!!!




இதுதான் கருணையில்லா நிதியின் சட்ட ஒழுங்கா??

Monday, March 29, 2010

சாம்பல் மேய்கிறேன்......








































நான் சாம்பல் மேய்கின்றேன்.!!!


நான் திசை திருப்பப் பட்டுவிட்டேன்


எனக்கும் இனி வரும் – என்


தலைமுறைக்கும் விதி எழுதி விட்டார்கள்


இரும்பாணிகொண்டு...






சாம்பலை மேயச் சொன்னார்கள்


“மஞ்சள் காமாளை” வருமென்றறிந்திருந்தும்


மறுக்க முடியவில்லை - நான்


சாம்பலை மேய்கின்றேன்.






சொர்க்க வாசல் திறக்குமென்று என்


வீட்டு வாசலை அடைத்துவிட்டுச்


சொற்பொழிவாற்றினர்.


நான் எந்த வாசலும் அறியாது


ஏதிலியாகினேன்.






திக்கிற்கொரு வானொலிகளில்


உரக்கக் கத்தி எதை எதையோ பரப்புரை


செய்தனர். நான்


என்னவென்றும் ஏதென்றும்


தெரியாதவனாகி விழித்தேன்..






ஆளுக்கொரு பேப்பரும்,


நாளுக்கொரு தொலைக்காட்சியுமாக


என் விதைக் கொட்டைகளை நசித்து போட்டன


புதுப்புதுப் பேய்கள்..






“எம்முடன் வந்து பங்காளியாயிரு”


ஊர்கள் பிரிந்து என் தலை


பிடித்தாட்டின.


நான் பேச்சிழந்து மூர்ச்சையானேன்



இடர்களைத் துடைக்கும்


தூதர்கள் எனவே தினமொரு


முகத்தைப் போர்த்தியபடியே


சங்கிலிபிணைத்தென் கழுத்தினை


இழுத்தனர்.


நான் கழுத்துமறுந்து மூளியாகினேன்.

ரமோனா

Monday, March 15, 2010

ஒரு மாதிரியான கதை!




ஒரு தேவதையும்
அவள் தேர்ந்தெடுத்த எழுத்தாளனும்...

ரமோனா

கல்லைக் கடவுள் சிறுதடியாற் தட்டினான். கல் சிதறுண்டு போனது. சிதறுண்ட கற்கள் சிறு சிறு தீவுகளாகின. அந்தத்தீவுகளில் மண்ணைப்படைத்து,அம்மண்ணில் மனிதரைக் கடவுள் ஊதினார். மனிதர்கள் உதயமாகினர். உதயமாகிய மனிதரின் தலையில் கடவுள் தடியால் தட்டியபோது பள்ளத்தில் விழுந்தவன் பள்ளனென்றும், பயத்தில் நளுவி ஏறியவன் நளவனென்றும் வயற்புறத்தில் விழுந்தவன் வேளாளன், என்றும் சத்தமிட்டுத் தொலைத்தவன் பறையனென்றும் சாதிபிரித்தார். பனைகளும் தென்னைகளும் முளைத்தன. நாய்களும், பூனைகளும்,பிற விலங்குகளும் மனிதரை வலம் வந்தன.காகங்கள் தலைக்கு மேலாய்ப் பறந்தன. இப்படித்தான் அந்தத்தீவு உருவானதாம்.
தீவின் அந்தோனியார் கோவிலில் அவனது 12வது பிறந்த தினத்திற்கு நேத்திவைத்து பூசைசெய்து குருத்துவம் படிப்பிக்கப்போவதாக ஒப்புக்கொடுத்து பூசைக்கு வந்தோருக்கெல்லாம் பாண்கொடுத்த அம்மா சொன்ன கதையது.
ஆனாலும் அடுத்த பிறந்த தினத்திற்கு அவன் வீடு அவனுக்காய் இருக்கவில்லை. பிள்ளை பிடிப்பவர்கள் அவனை இயக்கமொன்றிற்கென இரவிரவாக இழுத்துச் சென்று விட்டார்கள்.அங்கு அவனுக்கும் அவனையொத்த பலருக்கும் யானையேற்றங்களும் குதிரையேற்றங்களும் பயிற்றுவிக்கப்படவில்லை.குறுந்தடிகளைவைத்து வேலிபுகும் பயிற்சிகளும்,சென்ரியில் வேவுபார்த்தல், பங்கர் வெட்டுதல்,பாதைத்துப்பரவு எனப்பல சுளுவான வேலைகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டது. அவ்ர்களுக்கு வேளாவேளைக்குச் சாப்பாடும் இருந்தது. குறுந்தடிகளை வைத்துப் பபயிற்சிகள் பயிற்றுவித்த ஒரு நாளில் அவன்வேலிபுகுந்து தப்பி ஓடினான். வாய்ப்பந்தல் போடுவதில் வல்லவானான அவன், தன் உறவினர்களின் உதவியோடு பிரான்சிற்குள் தப்பி வந்த போது பாலகப் போராளி என்று அவனைப் பாசமுடன் பிரான்சு அரசு அகதியாக்கி அங்கீகரித்தது. அந்தப்பாலகப்போராளி பிரான்சின் அகதிமெத்தையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனோடு கூடவே அவனது பைபிளையும் தலையணையடியில் புதைத்து வைத்திருந்தான்.நித்திரையில் அவனது நினைவுகள் சிதறிப்பறந்து கொண்டிருந்தன.
ஜேர்மானிய நகரான ரியரின் முதன்மைச்சாலையினூடாக நடந்து, மூன்றாவது சந்தில் மொட்டாக்கோடு ஒரு உருவம் பழமையும் புதுமையுமான அந்த விரிந்த பங்களாவிற்குள் புகுந்தது. நெடுநாள் பழகிய வீட்டிற்குள் போவதைப்போல நுளைந்த அந்த உருவம் உள்ளிருந்த கண்ணாடி அலுமாரியின் முன் நின்றது. உள்ளே நீண்ட நாட்களுக்கு முன் எழுதி மை காய்ந்த கடிதங்கள் அடுக்குகளாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்கலங்க அவதானித்தது. "உன் அன்புக்காதலி ஜெனி" என்ற கையெழுத்தைப்பார்த்த போது குலுங்கிக்குலுங்கி அழுதது. தான் தூக்கிவளர்த்த பிள்ளையின் கடிதமது என்று மனதிற்குள் முணுமுணுத்த வண்ணம் திரும்பியது. வீட்டுவாசலில் ஜெனியும் மார்க்ஸஸும்,எங்கெல்ஸ்ஸும் சிரித்தவண்ணமுள்ள படத்தை வாஞ்சையோடு பார்த்து விட்டு வெளியேறியது.
இதிலிருந்து வடமேற்காக சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் மிகச்சிறிய குக்கிராமம் வோடன் இருந்தது. அங்குதான் மார்க்க்சின் நண்பன் எங்கெல்ஸ் வளர்ந்து வாலிபனானவன்.திராட்சைக் கொடிகள் படர்ந்து குலைகள் மதர்த்துச் செழித்து வளர்த்திருந்த அந்த ஊர்கள் இன்று கட்டிடக்காடுகளால் நிறைந்திருந்தன. எங்கெல்ஸ் ஊரோடு ஒத்தோட முடியாமல் பின் பிரான்சில் வாழ்ந்தவர். அவர் இருந்த அறையைப்பார்க்க அந்த உருவம் விரும்பியிருக்கவேண்டும். வானவெளியில் எம்பிக்கிளம்பியது. அப்போது அதன் முகம் சுடராய் ஒளிர்ந்தது.
3வது சாமத்திற்கான தேவாலாயத் திருமணி அடித்தோய்ந்த வேளை படுத்திருந்த பாலகப் போராளி தன்னுடைய தீவின் அந்தோனியாரின் திருமணியோ என நினைத்து அருண்டு படுத்த வேளை அந்த உருவம் அந்தப் பாலகப்போராளியின் அகதி மெத்தைக் கருகில் நின்றது. மெல்லக் கண்திறந்த அவன் கன்னி மரியாள் தன் கண்முன் நிற்பதைக்கண்டு அதிசயித்தான். மனதைத்திடப்படுத்திக் கொண்டு எழுந்து முழங்காற்படியிட்டு ஜெபித்தான். அவன் உடுத்திருந்த சறம் முதன் முதலாக (wet dream ) எனப்படும் வெள்ளை வெளியேற்றத்தால் நனைந்திருந்தது. அவன் அதைப்பார்த்த போது வெட்கம் பொங்கித் திடுக்கிட்டான்.
மகனே வெட்கப்படாதே. இதுஆடவர் எல்லோர்க்கும் சகஷம். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. நீ இப்போ பாலகன் அல்ல இளைஞன் என்று அந்தக் கன்னிமரியாள் பேசிய போது அவனுக்கு மகிழ்வாய் இருந்தது. எங்கெல்ஸ்ஸுன் அறையை தலைகீழாக்கி வைத்திருக்கிறார்கள் என்றது கன்னி மரியாள். இது அகதிகளுக்கான அறை என்றான் பாலகப் போராளியாயிருந்து இப்போ இளைஞனானவன்.
நேற்று அது வேறொருவருடையதாயிருந்தது. இன்று அது உன்னுடையதாயிருக்கிறது, நாளை அது மற்றொருவருடையதாகும்,இதுவே அகதி அறைகளின் தத்துவம் என்றது அந்த கன்னிமரியாள் உருவம்.
அன்னையே நீங்கள் தான் கன்னிமரியாளோ?? சந்தேகத்தோடு கேட்டான் அவன்.
இல்லை நானும் கன்னிமரியாள் போன்றவள்தான் என்று புதிர் போட்டது அந்த உருவம்.
அப்படியென்றால் தாயே நீங்கள் யார்??
என் பெயர் ஹெலனா டெமூத்(Helena Demuth), கார்ல்மார்க்ஸின் மனைவி ஜென்னியை வளர்த்தவள் நான். எங்கெல்ஸ் என் நண்பன், கன்னிமேரிக்கும் கணவன் இல்லாமலேயே குழந்தை பிறந்தது. எனக்கும் அப்படியே ஆனது. அதன் பேரிலேயே நானும் கன்னிமரியாள் போன்றவள்தான் என்றேன் என்றது அந்த உருவம்.
பாலகப் போராளிக்கு எதுவும் பிடிபடவில்லை பைபிளில் தலைமுறை தலைமுறையாகக் கன்னிமரியாளின் வம்சம் எழுதப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறதே என்றான் அவன்.
பரிசுத்த ஆவிதான் தலைமுறைகளின் தலைவன் என்றது உருவம்.
நான் தனிநாயகமுதலியின் வம்சம் என்றான் பாலகப்போராளி விட்டுக்கொடுக்காமல்.
எவனுக்கும் எந்த வம்சமும் கிடையாது எல்லோரும் பரிசுத்த ஆவியின் பிள்ளைகளே என்றது அந்த உருவம்
பாலகப் போராளிக்கு கோபம் பொத்துக் கொண்டுவந்தது.
வம்சமென்று எதுவுமில்லை எல்லோரும் ஒன்றே என்றால் அதற்காகப் போராடிய நாமெல்லாம் என்ன கேணையர்களா?? இனம் பிரிச்சவனெல்லம் இழித்தவாயர்களா??
மொழிக்காக உயிரிழந்தோரெல்லாம் மடையர்களா??கேட்கவேண்டும் போலிருந்த கேள்விகளை மனதோடு அடக்கிக் கொண்டான்.
மௌனத்தோடு தலகுனிந்திருந்த பாலகப் போராளியை பார்க்க அவளுக்கு பாவமாய் இருந்தது.
அவன் மேல் இரக்கப்பட்டு " மகனே உனக்கு எது வேண்டுமானாலும் கேள்" என்றாள் ஹெலன்.
நான் ஊரார் மெச்ச எழுத்தாளானாக வேண்டும் என்றான் அவன்.
கையைச் சுழற்றி மனிதக் குரங்குவடிவிலான ஒரு எழுதுகோலை அவன் மீது விட்டெறிந்து, புல் உலர்ந்து பூ உதிரும்; உன்னுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகின்றேன் இந்தக் கணத்திலிருந்து நீ ஊரார் மெச்சும் எழுத்தாளானாவாய் என்று வரமருளியது.
அவளின் வாக்கு உடனே பலித்ததுபோல எழுதுகோலைக்கையிலேடுத்தவுடன் மானிடக்குரங்குபோலவே அவன் உடம்பு தினவெடுத்தது.
மகிழ்ச்சிபொங்க நான் உனக்கே என் எழுத்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன் தாயே என்று நாக்குளறத் தொழுதான்.இந்த அன்னிய மண்ணிலே நான் அகதியாவே மடிந்து விடுவேனா?? தாயே என் எதிகாலம் பற்றிச் சொல்லும் என்று சற்றும் மனம் தளராமல் கேட்ட போராளியை நோக்கி அந்தப்புனிதப்பாவை ஒரு புன்னகை சிந்தினாள். நீ புலன்பெயர்ந்தோருக்குத் தேவனாயிருப்பதற்காகவே, உன்னை உன் தீவிலிருந்து புறப்படப்பண்ணினார் கடவுள் என்றும் நானே கதைகளின் கர்த்தர் என்றும் துணிந்து சொல் என்றாள் அவள்.
உன் இனத்தின் எதிர்காலம் சவக்குழியில் போனாலும் உன் எதிர்காலம் பிரகாசமுறும். விடாக்கண்டனும், கொடாக்கண்டனுமாய் இருக்கிற உன்னைச் சிலர் குருவாக்குவார்கள். அச்சீடர்களின் குடும்பங்களைச் சிதைத்து நீ சுகந்தரிப்பாய். அந்தமான் செல்லூலர் சிறையை படம் பிடித்த தடித்த தோல்ச் சீமாட்டி உன்னை ஆசீர்வதிப்பாள். அவள் தயவில் நீ திரையில் வருவாய். புலிவாலை நீ பிடிப்பாய். அதனால் புகழடைவாய் எலியாய்க்கிடந்த நீ எல்லா மண்ணிலும் சண்டியனாவாய் என்று உத்தரம் கூறி, அந்ததேவதை மறைந்து போயிற்று.
அவன் கடைவாய் நீரைத்துடைத்தபடி புரண்டு படுத்தான்.கனவு விடுவதாயில்லை.
எழுதிக்கொண்டிருந்தான் அவன் எழுத்தால் பூவுலகம் விம்மியது. மூலை முடுக்கெங்கும் அவன் எழுத்து நிறைந்து வழிந்தது. புதிய புதிய சங்கீதங்களையும், பைபிளின் 3வது ஏற்பாட்டையும் எழுதிய அவன் 41வது தீர்க்கதரிசியாகப் பிரகடனப்படுத்தப்பட்டான். "ம்" என்ற மூச்சொலியில் அவன் உலக இருப்பை எழுதத் தொடங்கிய வேளை மேற்குத்திசையில் பூகம்பங்கள் வெடிக்கத்தொடங்கின. கீழ்த்திசையில் பேரலை எழுந்து ஊர்களை விழுங்கியது. மட்டக்களப்பிலிருந்தும், மண்டைதீவிலிருந்தும் அதல பாதாளத்தில் புதைந்திருந்த நீல நிறப்பாம்புகள் வெளிப்பட்டுச் சாரைசாரையாக உலகெங்கும் ஊரத்தொடங்கின.இராமேஸ்வரத்தில் இணக்கமிலாதவனுக்கு அடித்த்த போது உலகச் சண்டியனாவாய் என்கிற அன்னை ஹெலன்னவின் வாக்குத் தத்தம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பிரதியுபகாரமாக "ஹெலானாவின் குழந்தைக்கு யார் அப்பன்" என்று அவன் பூமியை உலுப்பத் தொடங்கினான். பூமி உருள உருள அவனுடைய கேள்விகளும், எழுத்துக்களும் பூமிப்பந்தை உப்பிப் பெருக்கச்செய்தன. அவனது பெண்ணியமும், இன்னபிற பேசாப் பொருள்களிலும் மேலும் பெருத்து உப்பிய உலகம் பலூனாய் வெடித்துச் சிதறி நிர்மூலமானது.
காதடியிற்கேட்ட வெடியோசை கேட்டு, அகதிமெத்தையில் கனவுகண்டு கொண்டிருந்த பாலகப் போராளி பயந்து போய்க் கண்விழித்தான்.
அவனது சறம் உண்மையில் வெள்ளை பட்டிருந்தது. வெட்கத்தோடு அங்குமிங்கும் பார்த்தான்.அவன் கனவிற்கண்ட தேவதைகள் எவையும் அவன் கண்முன் இருக்கவில்லை.
------------------

Tuesday, March 9, 2010

பகவானுக்குப் படுக்கை அறைப் பணிவிடை....

பகவானுக்குப் பணிவிடைசெய்தேன் படுக்கை அறையில்....
கை கால் பிடித்து விடுவது தப்பா? - ரஞ்சிதா பரபரப்புப் பேட்டி
Tue, 2010-03-09 07:45
நித்யானந்தா செக்ஸ் லீலையில் சம்பந்தப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இப்போது அவர் முதல்முறையாககுமுதம் ரிப்போர்டர் இதழுக்கு செல்போன் மூலம் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...
அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?
உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.
நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்
..."

உப்புச்சப்பற்ற ஊடகவிலாளர் மாநாடும் உண்மையை மூடுவதற்கான ஒப்பனைகளும்
ரஞ்சிதாவுடன் நீ படுக்கையிலிருந்தாயா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்பது தானே பதில் ஆனால் விளக்கங்களும் விசேடஅறிக்கைகளும் எதைமூடிமறைக்க?????