நான் சாம்பல் மேய்கின்றேன்.!!!
நான் திசை திருப்பப் பட்டுவிட்டேன்
எனக்கும் இனி வரும் – என்
தலைமுறைக்கும் விதி எழுதி விட்டார்கள்
இரும்பாணிகொண்டு...
சாம்பலை மேயச் சொன்னார்கள்
“மஞ்சள் காமாளை” வருமென்றறிந்திருந்தும்
மறுக்க முடியவில்லை - நான்
சாம்பலை மேய்கின்றேன்.
சொர்க்க வாசல் திறக்குமென்று என்
வீட்டு வாசலை அடைத்துவிட்டுச்
சொற்பொழிவாற்றினர்.
நான் எந்த வாசலும் அறியாது
ஏதிலியாகினேன்.
திக்கிற்கொரு வானொலிகளில்
உரக்கக் கத்தி எதை எதையோ பரப்புரை
செய்தனர். நான்
என்னவென்றும் ஏதென்றும்
தெரியாதவனாகி விழித்தேன்..
ஆளுக்கொரு பேப்பரும்,
நாளுக்கொரு தொலைக்காட்சியுமாக
என் விதைக் கொட்டைகளை நசித்து போட்டன
புதுப்புதுப் பேய்கள்..
“எம்முடன் வந்து பங்காளியாயிரு”
ஊர்கள் பிரிந்து என் தலை
பிடித்தாட்டின.
நான் பேச்சிழந்து மூர்ச்சையானேன்
இடர்களைத் துடைக்கும்
தூதர்கள் எனவே தினமொரு
முகத்தைப் போர்த்தியபடியே
சங்கிலிபிணைத்தென் கழுத்தினை
இழுத்தனர்.
நான் கழுத்துமறுந்து மூளியாகினேன்.
ரமோனா
No comments:
Post a Comment